என்னைக் கவர்ந்த சுவரொட்டி!

ன்று பாரிசில் திரையிடப்படவுள்ள Sandra BULLOCK நடித்த "PREMONITION" திரைப்படத்தின் விளம்பரச் சுவரோட்டியைப் பார்த்ததும் மிகக் கவர்ந்தது.

இயற்கை மரக்காட்டினுள் பெண் கோட்டோவியம்...

உங்களுக்குப் பிடித்ததா??







வீடியோ முயற்சி- குழந்தைகள்

புதிதாக ஒரு அடையாளம் தெரிகிறதே, என நோண்டிய போது படம் காட்டலாம் போல இருந்துது.

சரி என வீட்டுக்கு வந்த மைத்துனர் குழந்தைகளில் பழகி விட்டேன்.

சரியாக வந்துது போல தான் கிடக்கிறது.வெளிச்சம்,தெளிவு குறைவு. என் குட்டி NIKON
தன்னாலானதைச் செய்துள்ளது.

பஞ்சாமிர்தம் 2


யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கொடியேறியுள்ளது.
தம்பி ஊரோடி பகீ சுடச் சுடப் படம் போட்டிருந்தார். அதில் ஒன்று.
பகீக்கு நன்றி!

கந்தனுக்கு உகந்த பஞ்சாமிர்தப் பதிவு.



சர்க்கரை ,தயிர், நெய்,பால் ,தேன் -பஞ்சாமிர்தம்



பஞ்சாமிர்தம் 2

17 -11-2006 , பஞ்சாமிர்தம் என ஒரு பதிவிட்டு, இந்தப் ‘பஞ்சாமிர்தம்’

தயாரிக்க எத்தனை பழங்கள் சேர்க்கிறார்கள்.
( http://paris-johan.blogspot.com/2006/11/blog-post_9345.html)
என ஒரு கேள்வியும் கேட்டு முடித்திருந்தேன்.

சில பதிவர்கள் தங்களுக்குத் தெரிந்ததைக் கூறியிருந்தார்கள்.
அதன் பின் ஏற்பட்ட ‘பிற்றா’ சிக்கலின் பின் பதிவு போடச் சிரமம்
வந்து அதில் இருந்து விடுபட்டு ,அதன் தொடரை இன்று ,நாளையென ஒத்திப் போட்டு ,இப்போதிட உள்ளேன்.

பஞ்சாமிர்தத்தில் எத்தனை பழங்கள் சேர்கிறார்கள் என்பதற்கு வந்த விடைகள்

1-கண்ணபிரான் ரவிசங்கர்
பாம்பன் சுவாமிகள் தனது பதிகத்தில் பஞ்சாமிர்தம் பற்றிப் பாடியுள்ளார்.பழம், பால், நெய், தேன், சர்க்கரை/கல்கண்டு இவையே ஐந்து பொருட்களாகச் சொல்லி ஒவ்வொன்றிலும் அபிஷேகத்தை விவரித்துள்ளார்.பழம் பொதுவாக வாழை மட்டுமே!பின்னாளில் பல பழங்கள், பேரீச்சம் பழம் எல்லாம் சேர்ந்து கொண்டாலும், வாழை இல்லாமல் பஞ்சாமிர்தம் கிடையவே கிடையாது!
2-என்னார்
ஐந்து(பஞ்ச)பொருட்கள்1.மலைவாழைப்பழம்2.பேரீச்சம்பழம்3.கற்கண்டு
4.பச்சைகற்பூரம்5.ஏலக்காய்6.நாட்டுவெல்லம்7.பலாபழம் சேர்பதும் உண்டு.

3-வல்லி சிம்ஹன்
பஞ்ச அமிர்தம் பற்றி ரவி சொல்வது போலத்தான் இருக்கும் சாப்பிட:-)என்னார் ஐயா சொல்வதுபோல் பேரீச்சம்பழம் தட்டுப்படும்.
4-சுப்பையா அண்ணா
PANCHAMIRTHAM. Banana, 1. Grapes, a small buch. Raisins, 1 tsp. Dry dates, 3. Apple, 1. Jaggery, 1 cup. Honey, 1/4 cup. Ghee, 6 tsp ... ww.numkitchen.com/sw17_panchamirtham.htm

5-கானா பிரபா
எனக்குத் தெரிந்து, மாம்பழம், வாழைப்பழம், பேரீச்சை, பலாப்பழம், தோடை
6-சின்னக்குட்டி
/சின்னக் குட்டியர்!என்னது??? பஞ்சாமிர்தம் புறுட் சலாடா??(//ஆமாம் அது சாமிக்குக் கொடுக்கப்படும் அந்த நாள் புரூட் சலட் ;) ஹஹஹ

7- ஹரன்

பஞ்சாமிர்தம் என்பது = பஞ்ச (ஐந்து) + அமிர்த்ம் என்று சிறு வயதில் சமயப் புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.அதில் கட்டாயம் இடம் பெற வேண்டியவை முக் கனிகள் (வாழைப் பழம், பலாப் பழம், மாம் பழம்) பின்பு அதில் வேறு இருவகைப் பழமும் (ஊரில் பேரீச்ச்ம் பழம்/ மாதுளம் பழம்/ தொடை) ஆகியவற்றினைப் பஞ்சாமிர்தத்திலே கண்டிருக்கிறேன்... தேன்/கற்கண்டு போன்றனவும் சேர்க்கப்படும்...

நான் இப்பதிவிடக் காரணமாக இருந்தது. 22-01-1989 ல், இலங்கையில் இருந்து வெளிவந்த ‘சிந்தாமணி’ எனும் பத்திரிகையில் ஒரு வாசகர் ‘கேள்வி-பதில்’ பகுதிக்கு எழுதிக் கேட்ட கேள்வி, அதற்கு அந்தப் பத்திரிகையின் இப்பகுதிக்குப் பதிலிறுக்கும்’திரிஞானியார்’ எனும் புனைபெயரில் எழுதுபவர் பதில்.

அந்த வாசகர் கேள்வி:
பஞ்சாமிர்தத்தில் எத்தனை பழங்களைச் சேர்க்கிறார்கள்?

திரிஞானியார் பதில்:
இதுவும், ஒரு கேள்வியா? ‘பஞ்ச’ என்றாலே ஐந்து என்று தானே பொருள்!

என ஆச்சரியக் குறியிட்டு முடித்திருந்தது.

தன் சந்தேகமொன்றை பத்திரிகைக்கு எழுதித் தீர்க்க வேண்டுமெனும், சிந்தனையுள்ள ஒருவர், ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்பது தெரியாதவரா??
எனச் சிந்தித்துவிட்டு
, இங்கு தவறு இருக்கிறதென்பதை உணர்ந்து, பாரிசில் உள்ள நூலகம் (Centre Georges Pompidou ) சென்று ,அங்கு அன்று இருந்த ஒரே ஒரு தமிழ் உருப்படியான நா.கதிரவேற்பிள்ளை அவர்கள் யாத்த ‘தமிழ்மொழியகராதி’ யில் தேடிய போது (பிரதியின் படம் பார்க்கவும்)

அதில் இருந்த விடயம் எனக்குப் பத்திரிகை ஆசிரியருக்குப் பின் வரும்
கடிதத்தை எழுத வைத்தது.

பாரிஸ்
பிரான்ஸ்
21-01-1989


ஆசிரியர் ,சிந்தாமணி; இலங்கை
கனம்!
ஆசிரியர் அவர்கட்கு!
தங்கள் 22-01-1989 ,சிந்தாமணி ‘கேள்வி-பதில்’ பகுதியில் ,பத்தனையைச் சேர்ந்த எஸ்.ஜே.ஜெகநாதன் தனராஜ் எனும் வாசகர் கேட்ட கேள்விக்குத் ,திரிஞானியாரின் பதிலைக் கண்ணுற்றேன். அதில் திரிஞானியாரின் புலமையை விட ,மமதையே புலப்பட்டது.

வாசகர் கேள்வி:
பஞ்சாமிர்தத்தில் எத்தனை பழங்களைச் சேர்க்கிறார்கள்?
திரிஞானியார் பதில்:
இதுவும், ஒரு கேள்வியா? ‘பஞ்ச’ என்றாலே ஐந்து என்று தானே பொருள்!
என ஆச்சரியக் குறியிட்டு முடித்துள்ளார்.

இதனைப் பார்த்து ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் நான் பட்டேன். காரணம்
திரிஞானியார் பஞ்சாமிர்தம் என்றால் என்ன என்று தெரியாது, அடுத்தவரைக் கிண்டல் செய்ய முற்பட்டு ,தன் குறையைக் காட்டி விட்டார்.

வாசகர் கேள்விக்கு ,திரிஞானியார் அளித்த பதிலையிட்டு இலங்கை வாசகர்கள் யாதாயினும் விபரம் ,அடுத்தடுத்த கிழமைகளில் எழுதுவார்களா?
என எதிர்பார்த்து, எதுவும் இல்லாததால் இதை எழுதுகிறேன்.
நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் தமிழ் மொழியகராதிப்படி
பஞ்சாமிர்தம் – சர்க்கரை,தயிர்,தேன்,நெய்,பால் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(பிரதி அனுப்புகிறேன்)
எந்த வகையில் திரிஞானியார் ,வாசகர் சந்தேகத்தைத் தீர்க்கமுற்பட்டார்.
தனக்கே தெரியாத ஒரு விடயத்தை அவர் அதிமேதாவித்தனத்துடன் பதில் எழுதி தன் அகம்பாவத்தை வெளிக்காட்டி, அந்த வாசகனை இழிவுபடுத்தியுள்ளார்.
‘கற்றது கைமண்ணளவு’, யானையும் அடி சறுக்கும், சுட்டபழம் சுடாதபழம்-ஔவை, இவற்றைத் திரிஞானியார் அறியாரோ?


வாசகர் சந்தேகங்களை ஐயம் திரிபறத் தீர்க்க வேண்டியது, பத்திரிகா தர்மம் இதைவிட்டு கேலி வேறு செய்யும் பாணியில் பதில் அமைவது அழகல்ல. தங்களைச் சிறந்த பத்திரிகைகள் என்று கூறுபவற்றிற்கு அழகல்ல!

திரிஞானியார் பதிற்படி, பஞ்சாமிர்தத்தில் ‘பஞ்ச’ பழமானால், அவை எவை எனக் குறிப்பிடுவாரா?
ஒரு விடயம் நம் கோவில்களில் பஞ்சாமிர்தத்தில் முக்கனியையும் சேர்க்கிறார்கள். அதேவேளை அறுவடை காலத்துக்குத் தக்க வகையில் தோடை,மாதுளை,விளா,எலுமிச்சை என்றும் சேர்க்கும் பழக்கமும் உண்டு.
அதனால் பஞ்சாமிர்தம் ‘பஞ்ச’ எனும் கட்டுக்குள்ளும் அடங்கவில்லை.
அபிஷேகம் செய்யும் போது பழ,பால்,பஞ்சாமிர்த அபிஷேகமெனத் தனித்தனியே செய்யத் தொகையான அபிஷேக திரவியங்கள் கிடைக்காத இந்தக் காலத்தில் அர்ச்சகர்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து பஞ்சாமிர்தம் என்று செய்கிறார்கள். இதைக் கண்டு திரிஞானியார் தவறிவிட்டார்.
வாசகர் கேள்வி இதுவும் ஒரு கேள்வியா? என்றாகவில்லை. பதிலே இது கூடத் தெரியாது ‘திரிஞானி’ ஆகிவிட்டார்களே என அதிசயம்,ஆச்சரியம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.
திரிஞானியாரின் பதிலுக்குக் கேட்கப்பட்டிருக்க வேண்டிய கேள்வி.

‘பஞ்சாமிர்தத்தில் எத்தனை அமிர்தங்களையோ,பொருட்களையோ,பண்டங்களையோ சேர்க்கிறார்கள் என்பதே!’
தயவு செய்து வாசகர்களை இனியாவது ‘மட்டம்’ தட்ட முற்பட வேண்டாம்.
அறியாமை ஒரு குறையல்ல, அறிந்தவர் போல் நடிப்பதே மிகமிகப் பெரிய குறை.
வாசகர்களின் அறிவை வளர்க்கவே பத்திரிகைகள் என நான் நினைக்கிறேன்.பத்திரிகாசிரியர்களின் வயிற்றை வளர்ப்பதற்கென நான் கருதவில்லை.
எனது பதில் கூட நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் தமிழ்மொழியகராதியின் படியே அமைந்துள்ளது.
இக்கடிதத்தைத் தங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
அன்புடன் வாசகன்
யோகன்


இந்தக் கடிதத்துக்கு, எந்த விதமான பதிலும் ,தொடர்ந்து வந்த வாரங்களில் வெளிவரவில்லை.

இந்த மௌனத்தைச் சம்மதமாகக் கொண்டேன்.

இதனால் ‘பஞ்சாமிர்தத்துக்கும் பழத்துக்கும்’ என்ன சம்பந்தமெனப் பார்த்தபோது, நமக்குக் கோவிலில் தரப்படும் அதாவது ஐரோப்பிய, அமெரிக்கக் கோவில்கள் உட்பட இப்போ அதில் அப்பிள் பழம் உட்பட பல பழங்கள் கடிபடுகின்றன.

அதாவது அபிஷேக முடிவில் அர்ச்சகர் சகலதையும் கலந்தே தருகிறார். அது பொதுப் பெயராக ‘பஞ்சாமிர்தம்’ என அழைக்கப்படுகிறது. அதனால் இப்போது பால்,தயிர்,நெய்,சர்க்கரை,தேன் கலந்து கொடுத்துப் ‘பஞ்சாமிர்தம்’என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எனினும், பஞ்சாமிர்தத்துக்குப் பழம் சேர்க்கப்படத் தேவையில்லை. எனும் முடிவுக்கு நான் வந்துள்ளேன்.

ஆனால் கோவிலில் தருவதை தாராளமாகச் சாப்பிடுவேன்.

நீங்கள் என்ன? நினைக்கிறீர்கள்.

மிதக்கும் தோட்டங்கள்!! -FLOATING GARDENS



மிதக்கும் தோட்டங்கள்!! FLOATING GARDENS

பதிவர் வவ்வால் அவர்களின் "ஆழ்நீர் நெற் சாகுபடி- பொக்காலி" எனும் பதிவுக்கு;நான் இட்ட பின்னூட்டத்தில்;தொலைக்காட்சி விவரணச் சித்திரத்தில் பார்த்த மியன்மார் (பர்மா);மற்றும் சில தென் கிழக்காசிய மிக்கொங் நதியின் சதுப்பு நீர்த்தேக்கங்கள் உள்ள நாடுகளிலும் உள்ள "மிதக்கும் தோட்டங்கள்" பற்றிக் குறிப்பிட்டபோது; அவர் தனக்கு அது பற்றித் தெரியவில்லை எனவும் விளக்க முடியுமா? எனவும் கேட்டார்.

படங்களுடன் விளக்க பின்னூட்டத்தில் இயலாதென்பதால் ;யான் ஒரு பதிவாகவே அதை இடுகிறேன்.

நான் அந்த விவரணச்சித்திரத்தில் பார்த்ததையும் புரிந்து கொண்டதையும் இயன்றவரை விபரிக்கிறேன்.

இது குறிப்பாக மிக வெற்றியளித்துள்ளது மியன்மார் INLE LAKE நன்நீர் ஏரியிலேயே!!
அந்த ஏரியில் மரவீடுகள் அமைத்து வாழும் INTHAS எனும் இன மக்கள் கண்டு பிடித்த வழி முறையே இம் மிதக்கும் தோட்டம்.

அந்த ஏரியில் பெருவாரியாக வளரும் மிதக்கும் வகைப் பாசியை சேகரித்து ;ஏரிக்கரையோரம் பரப்பிக் குவிக்கிறார்கள்.





அவற்றின் கீழ்ப்பகுதி உக்கிப் போக மேற்பகுதி காயும் போது இயல்பாக அது மிதக்கும் நிலையடைகிறது.

பின் அதன் மேல் சுமார் அரை அடி உயரத்துக்கு ஏரி வண்டல் மண்ணை அள்ளிப்போட்டுத் தரையாக்கியதும் ,சுமார் 4' ஆழமுடைய தோட்டம் நிலம் தயார் நிலைக்கு வருகிறது.





பின் அதை 4' x 60 'அடிக்கு பெரிய மரம் அரியும் வாளால் அரிந்து ;
துண்டுகளாக்கி இழுத்துச் சென்று ஏரியில் சற்று ஆழமான பகுதியில்
ஊன்றப்பட்ட மூங்கில் தடிகளில் கட்டி;ஒவ்வொன்றுக்குமிடையில் சிறு படகு செல்லக்கூடிய வண்ணம் இடைவெளியும் விட்டுள்ளார்கள்.



இச்சிறு படகில் சென்றே தோட்டப்பராமரிப்பு, மற்றும் சாகுபடி செய்யவேண்டும். மிக இலகுவாக ஓட்டக்கூடிய இந்த சிறு தோணிகளில் முழுக்குடும்பமுமே இதன் பராமரிப்பில் ஈடுபடுவது அழகான காட்சி.

இந்தச் சாகுபடி யாவும் மிதக்கும் சந்தையிலேயே விற்பனையோ பண்டமாற்றோ செய்யப்படுகிறது.
மொத்தமாக வாங்குபவர்களும் இந்தச் சந்தையிலே வாங்கிச் செல்கிறார்கள்.


கோவா, கோவாப்பூ, கத்தரி;வெண்டை;அவரை; பீர்க்கு;; முக்கியமாகத் தக்காளி மற்றும் பூவினங்கள் சாகுபடி செய்கிறார்கள்.


இங்கு சாகுபடியாகும் தக்காளி மியான்மார் முழுதும் விற்பனையாவதுடன் ;பிரசித்தமானதெனவும் கூறினார்கள்.

இத்தோட்டம் சுமார் 15 வருடங்கள் பாவனையின் பின் நீரில் தானே அமிழ்ந்துவிடும்.

அத்துடன் இந்த நீர் நிலையில் உள்ள மீன்களையும் வலைவீசியோ ;விசேட கூடையாலோ பிடிக்கிறார்கள்.


இந்த நீராதரத்தில் அவர்கள் தங்கள் அனைத்து வாழ்வாதாரத்தையும் அமைத்து வாழ்கிறார்கள்.

தாய்லாந்து,கம்பூச்சியா, லாவோஸ் போன்ற நாடுகளிலும் இந்த முறை பயன்பாட்டில் உள்ளது.

இப்போது வங்காள தேசத்திலும் நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இணையத்தில் படித்தேன்.

முதல் முதல் இதைத் தொலைக்காட்சியில் பார்த்த போது, ஈழத்தில் இரணைமடுக் குளத்திலும் ,கிளிநொச்சி,வவுனியாவிலும் கைக்கொள்ளக் கூடிய முறையாக இருக்கென நினைத்தேன்.

எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சரியமில்லை.

அபூர்வ படங்கள்!! கிளைப் பனையும்; கிளைத் தென்னையும்...

லங்கையில் வடபகுதியில் உள்ள தீவுக் கூட்டத்தில் நெடுந்தீவில் இப்படி கிளையுடன் உள்ள பனையின் படம் பார்த்துள்ளேன்.
ஆனால் இந்தப் பனை எங்கே ? உள்ளது,எப்போ பிடித்த படம் எனும் விபரம் தமிழ்நாதத்தில் தரப்படவில்லை.






இந்தத் செவ்விளநீர்த் தென்னை ,இலங்கையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள கற்பிட்டி எனும் கிராமத்தில்( கொழும்பிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர்)உள்ளது. இப்படம் அங்கு சென்ற என் நண்பர் ஒருவரால் எடுக்கப்பட்டது.





தமிழக நண்பர்களே!!! இந்தியாவில் இப்படி? உண்டா??

****தமிழ்நாதத்திற்கும்; நண்பருக்கும் நன்றி