இந்தி நடிகர் சா ருக் கானுக்கு பாரிசில் சிலை.



இந்தியத் திரையுலகின் புகழ் பெற்ற நடிகர் சா ருக் கானுக்கு (Shah Rukh Khan) பாரிசில் Grévin மெழுகுச்சிலைக் காட்சியகத்தில் சென்ற 28‍ 04 2008 ல் சிலை வைக்கப்பட்டது.




இக்காட்சியகத்தில் வைக்கப்பட்ட முதல் இந்தியத் திரை நட்சத்திரத்ததின் சிலை இதுவே!



இச்சிலை சாருக் கான் அவர்களால் அவர் பாரிஸ் ரசிகர்கள் முன்னிலையில் ; இந்தியத் தூதர் திரு ரஞ்சன் மார்தா அவர்கள் வரவுடன் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் பிரான்சின் புகழ்பூத்த மூத்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ,உலகப் புகழ் கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் பிரான்ஸ் பதிப்பான மில்லியனர் (Millionnaire) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் JEAN PIERRE FOUCAULT கலந்து சிறப்பித்தார்.


இக்காட்சியகத்தில் ஏற்கனவே காந்தி சிலை உள்ளது. அதன் பின் சிலை வைக்கப்பட்ட இந்தியர் இவரே!!! முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குக் கூட இச் சந்தர்ப்பம் அமையவில்லை.

கானுக்கு ஏற்கனவே லண்டன் Madame Trussand மெழுகுச் சிலைக் காட்சியகத்தில்
எனைய இந்திய திரைநட்சத்திரங்கள் அமிதாப் பச்சன்;ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருடன் சிலையுள்ளது குறிப்பிடத்தக்கது.




இவ‌ருக்கு ச‌மீப‌த்தில் பிரான்ச‌ர‌சால் இந்திய‌ ‍பிரான்சிய‌ உற‌வுக‌ளைத் திரைப்ப‌ட‌ம் வாயிலாக‌ அபிவிருத்தி செய்த‌தைக் கௌர‌வித்து "செவ‌லியே" விருது வ‌ழ‌ங்கிய‌து
குறிப்பிட‌த்த‌க்க‌து.

இச் சிலைத் திற‌ப்பு வைப‌வ‌த்தில் இந்திய‌ க‌லாச்சார‌ நிக‌ழ்வுக‌ளும் இட‌ம் பெற்ற‌ன‌.

நிக‌ழ்வு ப‌ற்றிய‌ மேல‌திக‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்க்க‌ indeaparis.com எனும் த‌ள‌த்துக்குச் செல்ல‌வும்.

****காணொளி யுருயூப்பில்(You Tube) பெறப்பட்டது.

முட்டாள்கள்!! கேரளத்திலுமா??....




நான் கேரள மக்களை மிகப் புத்திசாலித்தனவர்களாகவும்,சிந்தனைத் திறன் மிக்கோராகவும், கல்வியறிவு மிக்கோராகவும் புகழ்வதையே அறிந்துள்ளேன். அது உண்மையாகவும் இருக்கலாம்.

ஆனால் இந்தக் காட்சியைப் பார்த்ததும்...எனக்கு எல்லாமே அதீத கூச்சலோ எனப்படுகிறது.

இந்த அளவுக்கு இவர்கள் ஆய்வுத் திறனற்றவர்களாக இருப்பார்கள் எனக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நீங்களும் இதைப் பாருங்கள்...உங்கள் கருத்தையும் கூறுங்கள்....


பல இலட்சம் மக்கள் கூடும் ஒரு இடத்தில், மிக வலிமை மிக்க சில மிருகங்களைக்

கொணர்து, எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல், மக்களை இவ்வளவு அவலப்பட வைத்ததுடன் ஒரு யானைப்பாகனின் அவல மரணம் கண்முன்னே நடப்பதைக் கூட தடுக்க வல்லமையற்றவர்களான இவர்கள் எப்படி புத்திசாலிகளானார்கள்.

யானை எனும் வல்லமைமிக்க மிருகத்துடன் இத்தனை நூற்றாண்டு பழகியும் அதன் கோரமுகம் இவர்கள் அறியாதது வேதனையே!!

இறந்தது ஒரு ஏழையானைப்பாகன் என்பதால் இந்த அசட்டையா?? புரியவில்லை.

இத்தனை மக்கள் கூடும் இடத்தில் இப்படியான பயங்கர ,சிலசமயம் கட்டுக்குள் இலகுவாகக்

கொண்டுவர முடியாத விலங்கைக் கொண்டுவந்தது மிகத் தவறு.

சரி கொண்டுவந்தார்கள் ஆனால் அசம்பாவிதத்தை ஏதிர்பார்த்து, துப்பாக்கியேந்திய காவலர்களுக்கு சுடக் கூட அனுமதியளித்து கூட்டிவராதாது ஏன்??

கோவில் யானை என்பதால் கொல்ல மனசு வராவிடிலும் ,மயங்க வைக்கவும் கூடாதா??

இலங்கையில் நூற்றுக்கணக்கான யானைகள் பங்குபற்றும் பெரஹரா ஊர்வலத்தில், மயக்கமருந்து பொருத்திய துப்பாக்கியுடன் கூடிய மிருகவைத்தியர்களும், கொல்லக் கூடிய

துப்பாக்கியுடைய காவலர்களும் ,குறிப்பிட்ட இடைவெளியில் குழுக்குவாக உடன் வருவதை

அவதானித்துள்ளேன்.

ஆனால் இப்படியான எந்த ஏற்பாடுமற்ற யானைகள் பங்கேற்கும் இந்த விழாவை அரசு எப்படி

அனுமதியளித்தது.

இவ்வளவு கொடிய நிகழ்வு நடக்க எப்படி அனுமதிக்கிறார்கள்.

அத்துடன் இந்த யானைகளை இவ்வளவு வருத்தியா ஒரு சமயச் சடங்கை நிகழ்த்த வேண்டும்.

யானைகள் வலிமை மாத்திரமல்ல, பாசப்பிணைப்புள்ள விலங்குகள் விலங்குகள்.எத்தனை காலம் சென்றாலும் அவை இலகுவில் அவற்றை மறப்பதில்லை.

அத்துடன் அவற்றின் இனப்பெருக்ககாலத்தில் காதல் செய்ய மிகப் பிரியான விலங்கு, அது கிடைக்காத நிலையில் அது மதம் கொள்வது இயல்பு என மிருக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படி கட்டி வளர்க்கும் யானைகளையும் அந்த காதற் காலத்தில் அதற்கு அனுமதித்தால்

மதம் வருவதைத் தவிர்க்கலாம் என மிருக வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

எனவே...இனிவரும் காலத்தில் கோவில் திருவிழாக்களில் யானைகளைத் தவிர்க்க முற்பட

வேண்டும்.

யானைகளைச் சேர்த்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்.



அனுரா பண்டாரநாயக காலமானார்



இலங்கையின் மிக முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுராஇலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான அனுரா பண்டாரநாயக ஞாயிறன்று கொழும்பில் காலமானார்.
அண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு வயது 59.
1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த இவர், பலதடவை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துவந்துள்ளார்.
1983-89 காலப் பகுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இவர், 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார்.
இவரது தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக, தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக விளங்கினர். பின்னர் இவரது சகோதரியான சந்திரிகா குமாரதுங்க சுமார் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக விளங்கினார். ஆனாலும் பண்டாரநாயக குடும்பத்தின் ஒரேயொரு புதல்வரான அனுர பண்டாரநாயகவின் அரசியல் வாழ்க்கை என்பது பலத்த சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்துவந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய தடையாக இருந்தோரில் இவரும் தலையானவர்.என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணளவாக ஒரு அரசியல் அனாதியானவர்.இரு பிரதமமந்திரிகளுக்கு மகனாகப் பிறந்தும்.
***செய்தி பி.பி.சியில் பெறப்பட்டது.

நிச்சயம் நீங்க தமிழர் தான்!.....இப்படி இருந்தால்.....



இன்று காலை மின்னஞ்சல் ,திறந்ததும் என் நண்பர் சென்னையில் இருந்து அனுப்பிய இந்த விபரத்தைப் பார்த்ததும்; உங்களுடன் பகிரவேண்டும் போல் இருந்தது.அதுவும் 20ம் குறிப்பை நிரூபித்து தானும் தமிழனே என்று !உறுதிப்படுத்த வேண்டாமா???நண்பர் வட்டத்துள் சொல்லி விட்டேன்.நீங்களும் சுயசோதனை செய்யவும்.


1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!
3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா°..

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

திருகோணமலையும்....கோணேஸ்வரரும் ....கம்பரும்

அன்பே சிவம்
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பு நிமலர்நீ றணிதிரு மேனிவரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. -திருஞானசம்பந்தர்.

சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திரு மேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


இராவணன் பற்றிய கதையில்; திருகோணமலையில் உள்ள கோணேசர் ஆலயத்தைப் புரட்டி எடுக்க முற்பட்டதாக ஒரு கிளைக்கதையுண்டு.
சிறந்த சிவபக்தையான இராவணனின் தாயார் வயது முதிர்ந்த நிலையிலும் மலையேறும் சிரமத்தைச் சகிக்காத இராவணேசன் ;கோணமாமலையைப் புரட்டி ;அரண்மனைக்கருகே வைத்து தாயாரின் சிரமம் போக்க முற்பட்டு, வெட்டித் தோளைக் கொடுத்து அசைக்க முற்பட்ட போது; மலை ஆடியதால் உமையவளின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவனார்; பெருவிரலால் அழுத்தியபோது;அதனுள் சிக்குண்ட இராவணேசன்; இசையிலும் வல்லோன் ஆகையால் சாம கானம் பாடி மகிழ்வித்ததால் விடுபட்டான்.
இதனால் திருக்கோணேஸ்வரத்துக்கு 'தெட்சண கைலாயம்' எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

அந்த வெட்டப்பட்ட பகுதியென பிரதான மலையில் இருந்து பிரியும் பகுதியை; "இராவணன் வெட்டு "என அழைத்து பல்லாயிரக் கணக்கானோரால் விருப்பிப் பார்க்கச் செல்லும் இடமாகத் திகழ்கிறது।

பின்வரும் கம்பராமாயணம்பாடல், மண்டோதரி புலம்பலாக கம்பரால் எழுதப்பட்டது।


"வெள்ளெருக்கம் சடைமுடியான் வேற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி - இழைத்தவாறே

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியைக் மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்குதோ என உடல் புகுந்து தடவியதே ஒருவன் வாளி!!!"

வெள்ளெருக்கம் பூவை விரும்பி அணிகின்ற சிவனார் உறையும் திருக்கோணேசர் மலையை ,புரட்ட முற்பட்ட தெய்வீகத் தன்மை திகழும் பராக்கிரமமான இராவணனின் உடலில், எள் இருக்கக் கூட இடமில்லா வண்ணம் அம்புகள் இழைத்தது போல் துளைத்துச் சல்லடையாக்கியுள்ளனவே!!!ஏன்??? மண்டோதரியின் சிந்தனையாக கம்பர் கூறுகிறார்; தேன் ஒழுகும் மலர்களை அணியும் சீதாப்பிராட்டி மேல் கொண்ட காதல் இவன் உடலில்;இங்கிருக்கோ?எங்கிருக்கோ? என உச்சி முதல் உள்ளங்கால் வரை இராமபாணம் துளைத்துத் துளைத்து தேடியுள்ளது.அதனாலன்றோ!!

அழகான கற்பனை..."நான் ரசித்த வர்ணனைகள்" எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசனும்; இப்பாடலை வெகுவாக சிலாகித்து எழுதியுள்ளார்.மிக அழகாக

இந்தக் காட்சியை ,நாலு வரியில் கம்பர் அடக்கியுள்ளார்.முதல் படித்த போதே மனதில் ஆழமாகப் பதிந்த பாடல்.

******இன்று சிவராத்திரி தினம்; ஈழத்தில் புகழ் பெற்ற திருக்கேதீஸ்வரம்; திருக்கோணெஸ்வரம்; நகுலேஸ்வரம்; முனீஸ்வரம்,காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் போன்ற சிவன் கோவில்களுடன் ஏனைய சிவன் கோவில்களிலும் போர்ச்சூழலிலும் ; மிகச் சிறப்பாக வழிபாடு நடைபெறும்.எம்பெருமான் இன்னருள் பரவட்டும்.

குறிப்பு: கோணேசர் கோவில், இராவணன் வெட்டுப்படம் இணையத்திலும்; வெள்ளெருக்கம் பூப் படம் குமரனில் "கூடல்" தளத்தில் இருந்தும் எடுக்கப்பட்டன.நன்றி