Showing posts with label Myanmar. Show all posts
Showing posts with label Myanmar. Show all posts

மிதக்கும் தோட்டங்கள்!! -FLOATING GARDENS



மிதக்கும் தோட்டங்கள்!! FLOATING GARDENS

பதிவர் வவ்வால் அவர்களின் "ஆழ்நீர் நெற் சாகுபடி- பொக்காலி" எனும் பதிவுக்கு;நான் இட்ட பின்னூட்டத்தில்;தொலைக்காட்சி விவரணச் சித்திரத்தில் பார்த்த மியன்மார் (பர்மா);மற்றும் சில தென் கிழக்காசிய மிக்கொங் நதியின் சதுப்பு நீர்த்தேக்கங்கள் உள்ள நாடுகளிலும் உள்ள "மிதக்கும் தோட்டங்கள்" பற்றிக் குறிப்பிட்டபோது; அவர் தனக்கு அது பற்றித் தெரியவில்லை எனவும் விளக்க முடியுமா? எனவும் கேட்டார்.

படங்களுடன் விளக்க பின்னூட்டத்தில் இயலாதென்பதால் ;யான் ஒரு பதிவாகவே அதை இடுகிறேன்.

நான் அந்த விவரணச்சித்திரத்தில் பார்த்ததையும் புரிந்து கொண்டதையும் இயன்றவரை விபரிக்கிறேன்.

இது குறிப்பாக மிக வெற்றியளித்துள்ளது மியன்மார் INLE LAKE நன்நீர் ஏரியிலேயே!!
அந்த ஏரியில் மரவீடுகள் அமைத்து வாழும் INTHAS எனும் இன மக்கள் கண்டு பிடித்த வழி முறையே இம் மிதக்கும் தோட்டம்.

அந்த ஏரியில் பெருவாரியாக வளரும் மிதக்கும் வகைப் பாசியை சேகரித்து ;ஏரிக்கரையோரம் பரப்பிக் குவிக்கிறார்கள்.





அவற்றின் கீழ்ப்பகுதி உக்கிப் போக மேற்பகுதி காயும் போது இயல்பாக அது மிதக்கும் நிலையடைகிறது.

பின் அதன் மேல் சுமார் அரை அடி உயரத்துக்கு ஏரி வண்டல் மண்ணை அள்ளிப்போட்டுத் தரையாக்கியதும் ,சுமார் 4' ஆழமுடைய தோட்டம் நிலம் தயார் நிலைக்கு வருகிறது.





பின் அதை 4' x 60 'அடிக்கு பெரிய மரம் அரியும் வாளால் அரிந்து ;
துண்டுகளாக்கி இழுத்துச் சென்று ஏரியில் சற்று ஆழமான பகுதியில்
ஊன்றப்பட்ட மூங்கில் தடிகளில் கட்டி;ஒவ்வொன்றுக்குமிடையில் சிறு படகு செல்லக்கூடிய வண்ணம் இடைவெளியும் விட்டுள்ளார்கள்.



இச்சிறு படகில் சென்றே தோட்டப்பராமரிப்பு, மற்றும் சாகுபடி செய்யவேண்டும். மிக இலகுவாக ஓட்டக்கூடிய இந்த சிறு தோணிகளில் முழுக்குடும்பமுமே இதன் பராமரிப்பில் ஈடுபடுவது அழகான காட்சி.

இந்தச் சாகுபடி யாவும் மிதக்கும் சந்தையிலேயே விற்பனையோ பண்டமாற்றோ செய்யப்படுகிறது.
மொத்தமாக வாங்குபவர்களும் இந்தச் சந்தையிலே வாங்கிச் செல்கிறார்கள்.


கோவா, கோவாப்பூ, கத்தரி;வெண்டை;அவரை; பீர்க்கு;; முக்கியமாகத் தக்காளி மற்றும் பூவினங்கள் சாகுபடி செய்கிறார்கள்.


இங்கு சாகுபடியாகும் தக்காளி மியான்மார் முழுதும் விற்பனையாவதுடன் ;பிரசித்தமானதெனவும் கூறினார்கள்.

இத்தோட்டம் சுமார் 15 வருடங்கள் பாவனையின் பின் நீரில் தானே அமிழ்ந்துவிடும்.

அத்துடன் இந்த நீர் நிலையில் உள்ள மீன்களையும் வலைவீசியோ ;விசேட கூடையாலோ பிடிக்கிறார்கள்.


இந்த நீராதரத்தில் அவர்கள் தங்கள் அனைத்து வாழ்வாதாரத்தையும் அமைத்து வாழ்கிறார்கள்.

தாய்லாந்து,கம்பூச்சியா, லாவோஸ் போன்ற நாடுகளிலும் இந்த முறை பயன்பாட்டில் உள்ளது.

இப்போது வங்காள தேசத்திலும் நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இணையத்தில் படித்தேன்.

முதல் முதல் இதைத் தொலைக்காட்சியில் பார்த்த போது, ஈழத்தில் இரணைமடுக் குளத்திலும் ,கிளிநொச்சி,வவுனியாவிலும் கைக்கொள்ளக் கூடிய முறையாக இருக்கென நினைத்தேன்.

எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சரியமில்லை.