பஞ்சாமிர்தம் 2


யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கொடியேறியுள்ளது.
தம்பி ஊரோடி பகீ சுடச் சுடப் படம் போட்டிருந்தார். அதில் ஒன்று.
பகீக்கு நன்றி!

கந்தனுக்கு உகந்த பஞ்சாமிர்தப் பதிவு.



சர்க்கரை ,தயிர், நெய்,பால் ,தேன் -பஞ்சாமிர்தம்



பஞ்சாமிர்தம் 2

17 -11-2006 , பஞ்சாமிர்தம் என ஒரு பதிவிட்டு, இந்தப் ‘பஞ்சாமிர்தம்’

தயாரிக்க எத்தனை பழங்கள் சேர்க்கிறார்கள்.
( http://paris-johan.blogspot.com/2006/11/blog-post_9345.html)
என ஒரு கேள்வியும் கேட்டு முடித்திருந்தேன்.

சில பதிவர்கள் தங்களுக்குத் தெரிந்ததைக் கூறியிருந்தார்கள்.
அதன் பின் ஏற்பட்ட ‘பிற்றா’ சிக்கலின் பின் பதிவு போடச் சிரமம்
வந்து அதில் இருந்து விடுபட்டு ,அதன் தொடரை இன்று ,நாளையென ஒத்திப் போட்டு ,இப்போதிட உள்ளேன்.

பஞ்சாமிர்தத்தில் எத்தனை பழங்கள் சேர்கிறார்கள் என்பதற்கு வந்த விடைகள்

1-கண்ணபிரான் ரவிசங்கர்
பாம்பன் சுவாமிகள் தனது பதிகத்தில் பஞ்சாமிர்தம் பற்றிப் பாடியுள்ளார்.பழம், பால், நெய், தேன், சர்க்கரை/கல்கண்டு இவையே ஐந்து பொருட்களாகச் சொல்லி ஒவ்வொன்றிலும் அபிஷேகத்தை விவரித்துள்ளார்.பழம் பொதுவாக வாழை மட்டுமே!பின்னாளில் பல பழங்கள், பேரீச்சம் பழம் எல்லாம் சேர்ந்து கொண்டாலும், வாழை இல்லாமல் பஞ்சாமிர்தம் கிடையவே கிடையாது!
2-என்னார்
ஐந்து(பஞ்ச)பொருட்கள்1.மலைவாழைப்பழம்2.பேரீச்சம்பழம்3.கற்கண்டு
4.பச்சைகற்பூரம்5.ஏலக்காய்6.நாட்டுவெல்லம்7.பலாபழம் சேர்பதும் உண்டு.

3-வல்லி சிம்ஹன்
பஞ்ச அமிர்தம் பற்றி ரவி சொல்வது போலத்தான் இருக்கும் சாப்பிட:-)என்னார் ஐயா சொல்வதுபோல் பேரீச்சம்பழம் தட்டுப்படும்.
4-சுப்பையா அண்ணா
PANCHAMIRTHAM. Banana, 1. Grapes, a small buch. Raisins, 1 tsp. Dry dates, 3. Apple, 1. Jaggery, 1 cup. Honey, 1/4 cup. Ghee, 6 tsp ... ww.numkitchen.com/sw17_panchamirtham.htm

5-கானா பிரபா
எனக்குத் தெரிந்து, மாம்பழம், வாழைப்பழம், பேரீச்சை, பலாப்பழம், தோடை
6-சின்னக்குட்டி
/சின்னக் குட்டியர்!என்னது??? பஞ்சாமிர்தம் புறுட் சலாடா??(//ஆமாம் அது சாமிக்குக் கொடுக்கப்படும் அந்த நாள் புரூட் சலட் ;) ஹஹஹ

7- ஹரன்

பஞ்சாமிர்தம் என்பது = பஞ்ச (ஐந்து) + அமிர்த்ம் என்று சிறு வயதில் சமயப் புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.அதில் கட்டாயம் இடம் பெற வேண்டியவை முக் கனிகள் (வாழைப் பழம், பலாப் பழம், மாம் பழம்) பின்பு அதில் வேறு இருவகைப் பழமும் (ஊரில் பேரீச்ச்ம் பழம்/ மாதுளம் பழம்/ தொடை) ஆகியவற்றினைப் பஞ்சாமிர்தத்திலே கண்டிருக்கிறேன்... தேன்/கற்கண்டு போன்றனவும் சேர்க்கப்படும்...

நான் இப்பதிவிடக் காரணமாக இருந்தது. 22-01-1989 ல், இலங்கையில் இருந்து வெளிவந்த ‘சிந்தாமணி’ எனும் பத்திரிகையில் ஒரு வாசகர் ‘கேள்வி-பதில்’ பகுதிக்கு எழுதிக் கேட்ட கேள்வி, அதற்கு அந்தப் பத்திரிகையின் இப்பகுதிக்குப் பதிலிறுக்கும்’திரிஞானியார்’ எனும் புனைபெயரில் எழுதுபவர் பதில்.

அந்த வாசகர் கேள்வி:
பஞ்சாமிர்தத்தில் எத்தனை பழங்களைச் சேர்க்கிறார்கள்?

திரிஞானியார் பதில்:
இதுவும், ஒரு கேள்வியா? ‘பஞ்ச’ என்றாலே ஐந்து என்று தானே பொருள்!

என ஆச்சரியக் குறியிட்டு முடித்திருந்தது.

தன் சந்தேகமொன்றை பத்திரிகைக்கு எழுதித் தீர்க்க வேண்டுமெனும், சிந்தனையுள்ள ஒருவர், ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்பது தெரியாதவரா??
எனச் சிந்தித்துவிட்டு
, இங்கு தவறு இருக்கிறதென்பதை உணர்ந்து, பாரிசில் உள்ள நூலகம் (Centre Georges Pompidou ) சென்று ,அங்கு அன்று இருந்த ஒரே ஒரு தமிழ் உருப்படியான நா.கதிரவேற்பிள்ளை அவர்கள் யாத்த ‘தமிழ்மொழியகராதி’ யில் தேடிய போது (பிரதியின் படம் பார்க்கவும்)

அதில் இருந்த விடயம் எனக்குப் பத்திரிகை ஆசிரியருக்குப் பின் வரும்
கடிதத்தை எழுத வைத்தது.

பாரிஸ்
பிரான்ஸ்
21-01-1989


ஆசிரியர் ,சிந்தாமணி; இலங்கை
கனம்!
ஆசிரியர் அவர்கட்கு!
தங்கள் 22-01-1989 ,சிந்தாமணி ‘கேள்வி-பதில்’ பகுதியில் ,பத்தனையைச் சேர்ந்த எஸ்.ஜே.ஜெகநாதன் தனராஜ் எனும் வாசகர் கேட்ட கேள்விக்குத் ,திரிஞானியாரின் பதிலைக் கண்ணுற்றேன். அதில் திரிஞானியாரின் புலமையை விட ,மமதையே புலப்பட்டது.

வாசகர் கேள்வி:
பஞ்சாமிர்தத்தில் எத்தனை பழங்களைச் சேர்க்கிறார்கள்?
திரிஞானியார் பதில்:
இதுவும், ஒரு கேள்வியா? ‘பஞ்ச’ என்றாலே ஐந்து என்று தானே பொருள்!
என ஆச்சரியக் குறியிட்டு முடித்துள்ளார்.

இதனைப் பார்த்து ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் நான் பட்டேன். காரணம்
திரிஞானியார் பஞ்சாமிர்தம் என்றால் என்ன என்று தெரியாது, அடுத்தவரைக் கிண்டல் செய்ய முற்பட்டு ,தன் குறையைக் காட்டி விட்டார்.

வாசகர் கேள்விக்கு ,திரிஞானியார் அளித்த பதிலையிட்டு இலங்கை வாசகர்கள் யாதாயினும் விபரம் ,அடுத்தடுத்த கிழமைகளில் எழுதுவார்களா?
என எதிர்பார்த்து, எதுவும் இல்லாததால் இதை எழுதுகிறேன்.
நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் தமிழ் மொழியகராதிப்படி
பஞ்சாமிர்தம் – சர்க்கரை,தயிர்,தேன்,நெய்,பால் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(பிரதி அனுப்புகிறேன்)
எந்த வகையில் திரிஞானியார் ,வாசகர் சந்தேகத்தைத் தீர்க்கமுற்பட்டார்.
தனக்கே தெரியாத ஒரு விடயத்தை அவர் அதிமேதாவித்தனத்துடன் பதில் எழுதி தன் அகம்பாவத்தை வெளிக்காட்டி, அந்த வாசகனை இழிவுபடுத்தியுள்ளார்.
‘கற்றது கைமண்ணளவு’, யானையும் அடி சறுக்கும், சுட்டபழம் சுடாதபழம்-ஔவை, இவற்றைத் திரிஞானியார் அறியாரோ?


வாசகர் சந்தேகங்களை ஐயம் திரிபறத் தீர்க்க வேண்டியது, பத்திரிகா தர்மம் இதைவிட்டு கேலி வேறு செய்யும் பாணியில் பதில் அமைவது அழகல்ல. தங்களைச் சிறந்த பத்திரிகைகள் என்று கூறுபவற்றிற்கு அழகல்ல!

திரிஞானியார் பதிற்படி, பஞ்சாமிர்தத்தில் ‘பஞ்ச’ பழமானால், அவை எவை எனக் குறிப்பிடுவாரா?
ஒரு விடயம் நம் கோவில்களில் பஞ்சாமிர்தத்தில் முக்கனியையும் சேர்க்கிறார்கள். அதேவேளை அறுவடை காலத்துக்குத் தக்க வகையில் தோடை,மாதுளை,விளா,எலுமிச்சை என்றும் சேர்க்கும் பழக்கமும் உண்டு.
அதனால் பஞ்சாமிர்தம் ‘பஞ்ச’ எனும் கட்டுக்குள்ளும் அடங்கவில்லை.
அபிஷேகம் செய்யும் போது பழ,பால்,பஞ்சாமிர்த அபிஷேகமெனத் தனித்தனியே செய்யத் தொகையான அபிஷேக திரவியங்கள் கிடைக்காத இந்தக் காலத்தில் அர்ச்சகர்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து பஞ்சாமிர்தம் என்று செய்கிறார்கள். இதைக் கண்டு திரிஞானியார் தவறிவிட்டார்.
வாசகர் கேள்வி இதுவும் ஒரு கேள்வியா? என்றாகவில்லை. பதிலே இது கூடத் தெரியாது ‘திரிஞானி’ ஆகிவிட்டார்களே என அதிசயம்,ஆச்சரியம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.
திரிஞானியாரின் பதிலுக்குக் கேட்கப்பட்டிருக்க வேண்டிய கேள்வி.

‘பஞ்சாமிர்தத்தில் எத்தனை அமிர்தங்களையோ,பொருட்களையோ,பண்டங்களையோ சேர்க்கிறார்கள் என்பதே!’
தயவு செய்து வாசகர்களை இனியாவது ‘மட்டம்’ தட்ட முற்பட வேண்டாம்.
அறியாமை ஒரு குறையல்ல, அறிந்தவர் போல் நடிப்பதே மிகமிகப் பெரிய குறை.
வாசகர்களின் அறிவை வளர்க்கவே பத்திரிகைகள் என நான் நினைக்கிறேன்.பத்திரிகாசிரியர்களின் வயிற்றை வளர்ப்பதற்கென நான் கருதவில்லை.
எனது பதில் கூட நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் தமிழ்மொழியகராதியின் படியே அமைந்துள்ளது.
இக்கடிதத்தைத் தங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
அன்புடன் வாசகன்
யோகன்


இந்தக் கடிதத்துக்கு, எந்த விதமான பதிலும் ,தொடர்ந்து வந்த வாரங்களில் வெளிவரவில்லை.

இந்த மௌனத்தைச் சம்மதமாகக் கொண்டேன்.

இதனால் ‘பஞ்சாமிர்தத்துக்கும் பழத்துக்கும்’ என்ன சம்பந்தமெனப் பார்த்தபோது, நமக்குக் கோவிலில் தரப்படும் அதாவது ஐரோப்பிய, அமெரிக்கக் கோவில்கள் உட்பட இப்போ அதில் அப்பிள் பழம் உட்பட பல பழங்கள் கடிபடுகின்றன.

அதாவது அபிஷேக முடிவில் அர்ச்சகர் சகலதையும் கலந்தே தருகிறார். அது பொதுப் பெயராக ‘பஞ்சாமிர்தம்’ என அழைக்கப்படுகிறது. அதனால் இப்போது பால்,தயிர்,நெய்,சர்க்கரை,தேன் கலந்து கொடுத்துப் ‘பஞ்சாமிர்தம்’என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எனினும், பஞ்சாமிர்தத்துக்குப் பழம் சேர்க்கப்படத் தேவையில்லை. எனும் முடிவுக்கு நான் வந்துள்ளேன்.

ஆனால் கோவிலில் தருவதை தாராளமாகச் சாப்பிடுவேன்.

நீங்கள் என்ன? நினைக்கிறீர்கள்.

19 மறுமொழிகள்:

வெற்றி :சொல்வது

பஞ்சாமிருதம் சாப்பிட்டிருக்கிறேன்.

பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், பேரீச்சம்பழம் போன்ற பழங்கள் பஞ்சாமிருதத்தில் இருந்ததாக [சாப்பிட்ட போது] ஞாபகம்.

மற்றும்படி செய்முறையெல்லாம் எனக்குத் தெரியாது. :-))

G.Ragavan :சொல்வது

ஆகா...பஞ்சாமிரதத்திலும் பிரச்சனை வந்து விட்டதா?

கற்கண்டோடு சர்க்கரை நெய் பழத்தோடு தேன் கலந்த அமிர்தம் கிடைக்குதய்யா பழநியிலே
பஞ்சாமிர்தம் கிடைக்குதய்யா பழநியிலே

இந்தப் பாட்டை நினைத்துக் கொள்ளுங்கள். ஐந்து இருக்கிறது அல்லது.

1. கற்கண்டு - கடுக்முடுக் என்று கடிக்க
2. சர்க்கரை - இது இடித்த வெல்லம்
3. நெய் - உருக்குறு நெய். கசடு இல்லாது
4. பழம் - பழைய பஞ்சாமிர்தம்னா ஒரு பழந்தான். அதுவும் கூட மலைப்பழம் மட்டுமே. இப்பொழுது கிடைப்பதெல்லாம் போடுகிறார்கள். பழநி சித்தனாதன் கடையில் வாழை மட்டுமே போடப்பட்டு பஞ்சாமிர்தம் இன்றும் கிடைக்கிறது
5. தேன் - அந்த கொளகொளப்பும் இனிமையும் தருவதற்கு தேனைத் தவிர யாரால் முடியும்.

செய்முறை எளிதுதான். பழத்தைப் பிசுக்கிக் கொண்டு...எல்லாவற்றையும் கலந்து பிணைந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். தண்ணீர் படக்கூடாது. கையைக் கழுவி விட்டு தண்ணீர் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பிணையும் பாத்திரத்திலும் நீர் இருக்கக் கூடாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வெற்றி!
அகராதிப்படி பஞ்சாமிர்தத்தில் ,பழம் சேர்க்கத் தேவையில்லை என்பது என் அப்பிப்பிராயம்.
கனடாவில் அப்பிள் கூட இருக்கும் கவனியுங்கள்.
செய்முறை பெரிய கம்பசூத்திரமல்ல!
இனிக்கும் பழமெல்லாம் போட்டுப் பிசைந்து விடவும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ராகவன்!
பஞ்சாமிர்தத்துக்கு ஒரு பிரச்சனையும் வரவில்லை.
நீங்கள் கூறவேண்டியது, இந்த வாசகர் கேட்ட கேள்விக்கு, அந்த பத்திரிகையில் வந்த பதில் சரியா?
அடுத்து பஞ்சாமிர்தத்துக்கும், பழத்துக்கும் தொடர்பில்லை. என அகராதிப்படி நான் கருதுகிறேன்.
பதிவில் அதைக் குறிப்பிட்டுள்ளேன்.
உங்கள் அபிப்பிராயம் என்ன?

G.Ragavan :சொல்வது

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவன்!
பஞ்சாமிர்தத்துக்கு ஒரு பிரச்சனையும் வரவில்லை.
நீங்கள் கூறவேண்டியது, இந்த வாசகர் கேட்ட கேள்விக்கு, அந்த பத்திரிகையில் வந்த பதில் சரியா?
அடுத்து பஞ்சாமிர்தத்துக்கும், பழத்துக்கும் தொடர்பில்லை. என அகராதிப்படி நான் கருதுகிறேன்.
பதிவில் அதைக் குறிப்பிட்டுள்ளேன்.
உங்கள் அபிப்பிராயம் என்ன? //

இல்லை. அந்தக் கருத்து தவறு. பழமின்றிப் பஞ்சாமிர்தம் இல்லை. அகராதியில் பஞ்சகவ்யத்தையும் பஞ்சாமிர்தத்தையும் குழப்பிக்கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். பஞ்சாமிர்தத்தில் பாலோ தயிரோ சேர்ப்பது கிடையாது. நெய்யும் தேனும்தான்.

வவ்வால் :சொல்வது

யோகன் ,

விடகொண்டன் ஆக இருக்கிங்களே , பத்திரிக்கை ஆசிரியருக்கு கடிதம் எல்லாம் எழுதி விளக்கம் கேட்டு இருக்கிங்க! ஆனால் ராகவன் சொன்னது தான் சரி என நினைக்கிறேன். பால் சேர்க்க மாட்டார்கள். மலை வாழை சேர்ப்பார்கள். கொஞ்ச காலம் முன்னர் பஞ்சாமிர்தம் தயாரிப்பில் ஊழல் என பத்திரிக்கைகளில் செய்தி போட்டார்கள், மலை வாழைப்பழம் வாங்கினால் செலவு ஆகும் என சாதாரண பழன்கள் வாங்கி(அதுவும் அழுகிய பழன்கல் என குறிப்பிட்டு) போட்டதா அதில் குறைப்பட்டிருந்தார்கள். பஞாமிர்தம் தயாரிப்பது ஒப்பந்தம் விட்டு நடைபெறுகிறது பழனியில்.

மேலும் பச்சைகற்பூரம் சேர்ப்பார்களது ஒரு வகையில் பிரிசெர்வேடிவ் ஆக செயல்படும் அது கெட்டு விடாமல் பாதுகாக்க.

சயந்தன் :சொல்வது

அண்ணை. இந்தியாவில் பிரபல கோவில்களிலிருந்து வருபவர்கள் கொண்டு வரும் ரின் (டின்) பஞ்சாமிருதங்கள் சுவையில் வேறுபட்டதாக இருக்கும். எனக்கென்னவோ நமது கோவில்களில் பேரீச்சம் பழம் முதற்கொண்டு போட்டு பிசைந்து தரும் அமிர்தம் தான் பிடிக்கிறது.

சிறுவயதுகளில் அதை வீட்டிலே செய்து தரும்படி சண்டை போட்டிருக்கிறேன். இப்போதும் செய்து தந்தால் சாப்பிட ரெடி ..

சின்னக்குட்டி :சொல்வது

இலங்கையில் இருந்த வந்த தவஸ குரூப் தமிழ் பத்திரிகையான தினபதியின்ரை வாரபத்திரிக்கை சிந்தாமணியை மேலை சொல்லி இருக்கிறியள் 1989 ஆண்டு வரை வந்திருக்கே என்ற ஆச்சரியம் சிலவேளை இப்பவும் வருகுதோ

குமரன் (Kumaran) :சொல்வது

ஐயா. நீங்கள் சொன்ன ஐந்தையும் பஞ்சாமிர்தம் என்பதில் என்ன குறையும் இல்லை. ஆனால் இதுவரை பழம் சேர்த்த (வாழை, பலா, பேரீச்சம்) பஞ்சாமிர்தத்தைத் தான் உண்டிருக்கிறேன்.

நீங்கள் சொன்ன ஐந்தும் பஞ்சகவ்யம் என்றும் சொல்ல முடியாது. பஞ்சகவ்யத்தில் பசுவிடம் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் கலக்கப்பட்டிருக்கும் - சர்க்கரையும் தேனும் இருக்காது; அதற்குப் பதிலாக பசுவின் சாணமும் சிறுநீரும் மிகச்சிறிய அளவில் கலந்திருக்கும். அதனால் அகராதியில் பஞ்சகவ்யத்திற்கும் பஞ்சாமிர்தத்திற்கும் குழப்பியிருக்கிறார்கள் என்று சொல்ல இயலவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ராகவா!
பஞ்சகவ்வியம் என்பது; சிறிது பசு மாட்டுச் சாணி,பசுமாட்டுச் சலம்; பால்;தயிர்; நெய்...(குமரனும் குறிப்பிட்டுள்ளார் கவனிக்கவும்)
எனவே அகராதியில் குழப்பம் இல்லை.
இப்பதிவின் நோக்கம் பஞ்சாமிர்தம் என்பதை விட அந்தப் பத்திரிகையாளர் மட்டம் தட்டும் போக்கு; அதை சரியாக வெளிச்சம் போட என் பதிவு தவறி விட்டதோ!! தெரியவில்லை.
அடுத்து ... பஞ்சபூதம்= நிலம்;நீர்;காற்று;தீ;ஆகாயம்;பஞ்சபாண்டவர்=தருமர்;வீமன்;நகுலன்;அருச்சுணன்;சகாதேவன்; பஞ்சாட்சரம்=நமசிவாய,பஞ்சலோகம்=பொன்,வெள்ளி;செம்பு,ஈயம்;இரும்பு இப்படி இருக்கும் போது
பஞ்சாமிர்தம்= சர்க்கரை;பால்;தயிர்;நெய்;தயிர்..;அதாவது இவை ஐந்தும் அமிர்தங்கள்
அந்த வாசகர் கேள்விக்கு அந்த விடையிறுப்பவர் விடை சரியா?? என்பதையும் ஆயுங்கள்.
அதை ஆயமுற்பட்டதால் தான் இக்கடிதம் எழுத வந்தது.
இன்றைய வியாபாரமயமான பக்திப் பஞ்சாமிர்தம் பற்றிய பேச்சுக்கு இடம் இல்லை.
அதில் கெட்டுப்போகக் கூடாது;நெடுநாள் பாதுகாக்க வேண்டும் எனும் வியாபார; பணம் பார்க்கும் உத்திகள் புகுந்து விட்டன. பழனி உட்பட..
சித்தர் வடித்த மூலிகைச் சிலையையே சுரண்டிக் காசு பார்த்த கூட்டம்....எதுவும் செய்யும்
காசுக்காக இவர்கள் நோக்கம் காசு பார்ப்பது; அதற்கு எந்த விதிகளையும் உடைக்கத் தயங்க மாட்டார்கள்.
அதற்கு நம் பக்தி;கன்னத்தில் போடும் தன்மை வெகு சாதகமாகிற தென்பதே உண்மை..அத்துடன் "மணி கட்டிய மாடு" களாக இருந்தால் கேட்பார்கள்.

பகீ :சொல்வது

பஞ்சாமிர்தத்திற்கு பழங்கள் சேர்க்கப்படுவதில்லை என்றுதான் கழகத் தமிழ் அகராதியும் சொல்கின்றது.

ஊரோடி

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

//விடாகொண்டன் ஆக இருக்கிங்களே , பத்திரிக்கை ஆசிரியருக்கு கடிதம் எல்லாம் எழுதி விளக்கம் கேட்டு இருக்கிங்க! //

வவ்வால்!
அந்தக் காலத்தில் நான் இலங்கையில் இருந்திருந்தால் அந்த பத்திரிகை ஆசிரியரையே சந்தித்திருப்பேன்.
(வயதுத் துடிப்பு) அந்தக் கடிதம் எழுதக் காரணம் அவர் வாசகனை மட்டம் தட்டும் பாணியில் கூறிய பதில் "இதுவுமொரு கேள்வியா"... தன் பக்கம் தவறை வைத்துக் கொண்டு; மட்டம் வேறு தட்டும் பதில்
என்னை எழுத வைத்தது.
இந்த பதிவுக்கு நான் வந்தது கூட "நான் சுஜாதா அவர்களுக்கு எழுதிய கடிதமே".. தவறு கண்டால் எழுதித் தெரிவிப்பேன்.
இன்றேனில் எவ்வளவோ வசதியுண்டு. அன்று கடிதம் தவிர ஏதுமில்லை. அதன் ஒரு பிரதி வைத்திருந்ததால் இன்று பதிவு போட்டேன்.
மேலும்... நீங்கள் பின்னூட்டங்களையும் படிக்கிறீர்கள் எனக் கருதுகிறேன். குமரன் பின்னூட்டம் ;ராகவன் பின்னூட்டம்; ராகவனுக்கு என் பின்னூட்டம் பார்க்கவும்.
இப்போதும் நான் தெளிவாகவுள்ளேன். பஞ்சாமிர்தத்தில் பழம் சேர்ப்பது..;பிற்பாடு வந்த ஏற்பாடு.
பஞ்சாமிர்ததுள் பழம் வரவில்லை. ஆனால் சேர்ப்பதில் தவறில்லை. வசதிபோல் சேர்க்கலாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில்லை.
நிற்க மலைவாழைபழம் என்பது என்னவகை; படம் போட்டுக் காட்ட முடியுமா? இலங்கையில்
கப்பல்;இதரை;கதலி,செவ்வாழை;ஆனை;மொந்தன்(சமையலுக்கு)என்பனவே எனக்குத் தெரிந்தவை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சயந்தன்!
எனக்குக் கூட இந்தப் பழம் போட்ட கலவை நன்கு பிடிக்கும். முக்கனி;விளா;மாதுளைமுத்து;பேரீஞ்சு என நம்ம ஊர் அர்ச்சகர்கள் செய்வார்கள் அமுதமே!!
ஆனால் இந்தப் பத்திரிகாசிரியர் லொள்ளு....தான் நான் ஆயமுற்பட்டது.
அவர் இப்போ உயிருடன் இருக்கிறாரோ தெரியவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சின்னக்குட்டியர்!
90 மட்டில் அது வெளிவந்திருக்க வேண்டும். சிறிமாவின் தமிழூது குழல்....

வல்லிசிம்ஹன் :சொல்வது

Very true Yohan.

Like we have discussed earlier,
the only fruit I could have identified is Banana..
that too because have seen the t.v images of making panjaamirtham.

The ingredients
kalkaNdu,honey,fruit,ghee and jaggery make good sense.
sorry to comment in English. pl excuse.
I agree with Ragavan.
as for the reply given by the person mentioned,you have to ignore this .

நளாயினி :சொல்வது

மாம்பழம் வாழைப்பழம் பலாப்பழம். மாதுளம்பழம். விளாம்பழம்.விளாம்பழம்.( பஞ்சாமிர்தத்திற்கு போடும் பழங்கள் )

வவ்வால் :சொல்வது

யோகன்,

பழைய பஞ்சாமிர்த பதிவு இல்லையா இது, மீண்டும் மேல வந்திருக்கு, நடுவில எனக்கும் ஒரு தகவல் கிடைத்தது சொல்லலாம் என்று நினைத்து மறந்துவிட்டேன்(பதிவை தேட சோம்பல்)

பஞ்சாமிர்த தயாரிப்பு பற்றி ஒருவர் சொன்னார், பழங்கள், கலவை எல்லாம் ஒரு பெரிய தொட்டியில் போட்டு ஆட்கள் காலால் மிதித்து கூழாக்குவார்களாம், அதை தான் நீங்கலாம் சாப்பிடுறிங்க என்று சொன்னார், எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அதிக அளவு பஞ்சாமிர்தம் தயாரிக்கனும், எந்திரம் இல்லாம கையாள எவ்வளவு தான் பிசைவாங்கனு சொன்னார், அதுவும் சரியா தான் இருக்கு, உங்களுக்கு எதுவும் தெரியுமா அது பற்றி!

உண்மைத்தமிழன் :சொல்வது

ஆஹா.. அப்பனின் பிரசாதத்திலும் பிரச்சினையா..?

யோகன் ஸார்.. உங்களுடைய முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்..

பஞ்சாமிர்தமே அமிர்தம் போல இருக்கும் என்பதால்தான் அனைவரும் உள்ளங்கையில் குவித்து அதில் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

அதனுடைய சுவைக்கான காரணங்களில் ஒன்றாக வாழைப்பழத்தை சேர்க்கிறார்கள் என்று படித்திருக்கிறேன். பஞ்சாமிர்தத்தில் உடனடியாக கண்டுபிடிப்பது போல் இருப்பது அதில் இருக்கும் கற்கண்டு..

இப்போது அதில் கூட ஊழல் என்று சொல்லி பழனியின் பெயர், என் அப்பன் மலையைவிட உயர்ந்துவிட்டது..

நானும் தேடுகிறேன்.. கிடைத்தால் சொல்கிறேன்..

கார்த்திக்குமார், ஈரோடு :சொல்வது

100% சரி