சூரன் போர்....


உலகெங்கும் முருகனாலயாங்களில் கந்த சஸ்டி நோன்பிருந்து, இன்று சூரன்
போரும் நடைபெற்றுள்ளது.
எங்கள் இளமைக் காலத்தில் இந்தச் சூரன் போர் ஈழத்து முருகன் கோவிலெங்கும்
மிக அமர்க்களமாக நடக்கும்.
இன்று கூட ஈழத்தில் ,நடைபெறுவதாகக் கூறினார்கள். ஈழத்தில் எந்தச்
சின்ன முருகன் கோவிலிலும் சூரன் உருவம் இருக்கும்...
அந்தப் பக்தி மயமான நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.

எங்கள் முருகன் கோவிலிலும் கந்தபுராணப் படிப்புடன்,சூரன் போர்
திருக்கல்யாணம் எனச் சிறப்பாக இந்தக் கந்த சஸ்டி நிறைவுறும்.

சூரன் போர் அன்று மாலை கோவிலடி களை கட்டி விடும். சூரன் பகுதி

முருகன் பகுதி கூடாரம் இருக்கும்.சூரன் கூடாரத்தில் பறை அடிக்க ஏற்பாடு
செய்வார்கள். சூரன் புறப்பாடு பறை முழக்கத்துடன்
ஆரம்பமாகும்.

சிறுவர், கூட்டம் கும்மாளமடித்துக் கொண்டு திரிவோம்.

எங்கள் சூரன் சுமார் 7 அடி உயரம், பிதுங்கும் விழி, கையில்
அம்பு வில்’ நீல நிறத்தில் ,அச்சுறுத்தும் பார்வையுடன் இருப்பார்.

அவர் நெங்சு பிளக்கும் அமைப்பு பலரால் போற்றப்பட்டதுடன்
சுமார் 75 வருடங்களுக்கு முன் அதைச் சிறப்புற அமைத்தது
பலரை வியப்புக்குள்ளாக்கியது.

குறிப்பாக இந்தச் சூரன் சிங்கத்தலை,யானைத்தலை,எருமைத்தலை
என பல தலைமாற்றங்கள் செய்யக்கூடியது.


வீதிக்கு ஒரு தலையாக முருகன் வீழ்த்துவார்.

கடைசியாக மாமரக்கிளையுடனும் வருவார். அந்தக் கிளையில் தொங்கும்
மாங்காய்க்கு சிறுவர்கள் அலைவோம்.

அத்துடன் அந்த மாங்காய்க்கு, திருமணமான பெண்களிடமும், பலகாலம்
குழந்தைப் பாக்கியமில்லாப் பெண்களிடமும் கிராக்கி அதிகம்.
சிலர் தமக்குக் கிடைப்பதிலும் ஒரு துண்டாவது, இப்பெண்களுக்குக்
கொடுப்பார்கள்.

அந்த மாங்காய் உண்டால், குழந்தைப் பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை.
அது நடந்ததாகக் கூடப் பலர் கூறக் கேட்டுள்ளேன்.


பின் வந்த பட்டன வாழ்வில் இந்த விழாவின் வண்ணங்கள்
குறைந்து, போருடன் இல்லாமலே போய்விட்டது.
எங்களூர்ச் சூரன் போல்.....






அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படைதனிலே வருமுருகா- முருகா

பாட்டுடைத் தலைவனென்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் - முருகா
அறுபடை......


வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த
வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படை வீடு - முருகா
அறுபடை....


ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல
ஓமெனும் மந்திரத்தின் பொருளுரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்தமலை
எங்கள் தமிழ்த் திருநாடுகண்ட சுவாமிமலை....
அறுபடை

தேவர் படைத் தலைமைப் பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
அறுபடை


குறுநகை தெய்வானை மலரோடு உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ணத் திருப்பரம் குன்றமெனும் படைவீடு
அறுபடை

தேவர் குறைதவிர்த்துச் சினம் தணிந்து
வள்ளி தெள்ளுதமிழ்க் குறத்தி தலை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை, எங்கள்
கன்னைத் தமிழர் திருத் தணிகை மலை..
அறுபடை

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர் சோலை
அறுபடை


இந்த நாளில்....
இந்தப்பாடலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் எழில் முருகனாக,ஜெயலலிதா- வள்ளி, கே.ஆர்.விஜயா- தெய்வயானையாகவும்
என் அபிமான சீர்காழியார்.. நக்கீரராகவும் தோன்றிய சிறப்பாகப் பாடி
நடித்துள்ளார்.
கண்ணதாசனின் வண்ணவரிகள்.. அறுபடைவீட்டின் சிறப்பைக் கூறும், மற்றுமொரு திருப்புகழ்.
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் காம்போதி,இந்தோளம்,சக்கரவாகம்,கானடா,ஹம்சானந்தி,
நாட்டைகுறிஞ்சி, காவி ராகங்களில் அற்புதமான அமைந்த
ராகமாலிகை.
புல்லாங்குழலும், மணி ஒலியும் இப்பாடலின் இசையில், பக்திமயமாக அமைந்தது .பெரும் சிறப்பு...

****இதை யூரியூப்பில் பதிவேத்திய Seventucenz க்கு நன்றி

** முதற் படம் நல்லூர் ஆறுமுக சாமி தேர்ப் பவனிப் படம், தம்பி கானா பிரபா பதிவில்

பிரதி எடுத்தது.



4 மறுமொழிகள்:

கானா பிரபா :சொல்வது

வணக்கம் யோகன் அண்ணா

உங்கள் நினைவு மீட்பில் நானும் கலந்தேன். எங்களூர் இணுவில் கந்தசுவாமி கோயிலில் நடக்கும் சூரன் போர் குறித்து "என் இனிய மாம்பழமே" பதிவில் எழுதியது, கீழே



கந்தசஷ்டி கடைசி நாள் சூரன்போர் அன்று எங்களூர் இணுவில் கந்தசுவாமி கோயில் களை கட்டும். சூரன் ஒவ்வொரு வேஷமாக தலை மாற்றி வருவது சூரன் போர் நிகழ்வில் தனித்துவமான காட்சி. ஓவ்வொன்றாக மாறும் சூரனில் வடிவம், ஒரு சமயம் சூரன் மரமாக மாறுவதைக் காட்டுவதற்கு சூரன் சிலையின் பின்னால் இருந்தவருக்கு மாங்கொப்பு குலைகளுடன் கையளிக்கப்படும். அந்த நிகழ்வும் தோற்கடிக்கப்பட்டு சூரன் நிர்க்கதியாக நிற்க, வீரபாகு தேவர் வெற்றிப்பெருமிதத்தில் சூரனைச் சுற்றி ஒரு வட்டமடிக்க , அந்த சமயம் பார்த்து தயாராக இருந்த கோயில் பொடியள் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, மடப்பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மாம்பழக்கடகங்களை எடுத்துவந்து சூழ்ந்திருந்த சன சமுத்திரத்துக்குள் நாலாபக்கமும் எறிவார்கள். சனமும் இளைஞர்களை ஆவென்று பார்த்திருந்து பழங்களை எறியும் தருணம் ஒவ்வொன்றிலும், தூக்கியெறியப்படும் மாம்பழங்களைப் போல ஓடியோடி மாம்பழம் எடுப்பதில் முனைப்பாக இருப்பார்கள். என்னதான் மாம்பழம் வாங்குமளவிற்கு வசதியிருந்தாலும் இப்படிக் கோயில் பழங்களை எடுத்துக் கொண்டுபோவது அவர்களுக்கு ஒருஆத்ம திருப்தி தரும் விசயம்.

G.Ragavan :சொல்வது

சூர்மா தடித்த சுடரனைய வெள்வேலே என்று போற்றுகிறாரே இளங்கோ. சூர்னா துன்பம். மான்னா பெரிய. பெரிய துன்பம்...அந்தத் துன்பத்தைத் தடித்தவன். அதாவது போக்கியவன். அதான் முருகன்.

அருமையான பாடலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி ஐயா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

பிரபா!
உங்கள் ' என் இனிய மாம்பழமே' மறக்க முடியாத பதிவு.
ஞாபகம் உண்டு.உங்கள் வித்தியாசமான நேரடி வர்ணனை போன்ற எழுத்து.காட்சிப் படுத்தும் எழுத்து.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ராகவா!
கேட்ட காலத்தில் இருந்து இப்பாடல் விருப்பம்.அதுவும் இசைத்தட்டில் இரு
பக்கமுள்ள விரல் விட்டெண்ணக்கூடிய
பாடல்களில் தரமான பாடல்