நிச்சயம் நீங்க தமிழர் தான்!.....இப்படி இருந்தால்.....



இன்று காலை மின்னஞ்சல் ,திறந்ததும் என் நண்பர் சென்னையில் இருந்து அனுப்பிய இந்த விபரத்தைப் பார்த்ததும்; உங்களுடன் பகிரவேண்டும் போல் இருந்தது.அதுவும் 20ம் குறிப்பை நிரூபித்து தானும் தமிழனே என்று !உறுதிப்படுத்த வேண்டாமா???நண்பர் வட்டத்துள் சொல்லி விட்டேன்.நீங்களும் சுயசோதனை செய்யவும்.


1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!
3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா°..

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

திருகோணமலையும்....கோணேஸ்வரரும் ....கம்பரும்

அன்பே சிவம்
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பு நிமலர்நீ றணிதிரு மேனிவரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. -திருஞானசம்பந்தர்.

சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திரு மேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


இராவணன் பற்றிய கதையில்; திருகோணமலையில் உள்ள கோணேசர் ஆலயத்தைப் புரட்டி எடுக்க முற்பட்டதாக ஒரு கிளைக்கதையுண்டு.
சிறந்த சிவபக்தையான இராவணனின் தாயார் வயது முதிர்ந்த நிலையிலும் மலையேறும் சிரமத்தைச் சகிக்காத இராவணேசன் ;கோணமாமலையைப் புரட்டி ;அரண்மனைக்கருகே வைத்து தாயாரின் சிரமம் போக்க முற்பட்டு, வெட்டித் தோளைக் கொடுத்து அசைக்க முற்பட்ட போது; மலை ஆடியதால் உமையவளின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவனார்; பெருவிரலால் அழுத்தியபோது;அதனுள் சிக்குண்ட இராவணேசன்; இசையிலும் வல்லோன் ஆகையால் சாம கானம் பாடி மகிழ்வித்ததால் விடுபட்டான்.
இதனால் திருக்கோணேஸ்வரத்துக்கு 'தெட்சண கைலாயம்' எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

அந்த வெட்டப்பட்ட பகுதியென பிரதான மலையில் இருந்து பிரியும் பகுதியை; "இராவணன் வெட்டு "என அழைத்து பல்லாயிரக் கணக்கானோரால் விருப்பிப் பார்க்கச் செல்லும் இடமாகத் திகழ்கிறது।

பின்வரும் கம்பராமாயணம்பாடல், மண்டோதரி புலம்பலாக கம்பரால் எழுதப்பட்டது।


"வெள்ளெருக்கம் சடைமுடியான் வேற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி - இழைத்தவாறே

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியைக் மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்குதோ என உடல் புகுந்து தடவியதே ஒருவன் வாளி!!!"

வெள்ளெருக்கம் பூவை விரும்பி அணிகின்ற சிவனார் உறையும் திருக்கோணேசர் மலையை ,புரட்ட முற்பட்ட தெய்வீகத் தன்மை திகழும் பராக்கிரமமான இராவணனின் உடலில், எள் இருக்கக் கூட இடமில்லா வண்ணம் அம்புகள் இழைத்தது போல் துளைத்துச் சல்லடையாக்கியுள்ளனவே!!!ஏன்??? மண்டோதரியின் சிந்தனையாக கம்பர் கூறுகிறார்; தேன் ஒழுகும் மலர்களை அணியும் சீதாப்பிராட்டி மேல் கொண்ட காதல் இவன் உடலில்;இங்கிருக்கோ?எங்கிருக்கோ? என உச்சி முதல் உள்ளங்கால் வரை இராமபாணம் துளைத்துத் துளைத்து தேடியுள்ளது.அதனாலன்றோ!!

அழகான கற்பனை..."நான் ரசித்த வர்ணனைகள்" எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசனும்; இப்பாடலை வெகுவாக சிலாகித்து எழுதியுள்ளார்.மிக அழகாக

இந்தக் காட்சியை ,நாலு வரியில் கம்பர் அடக்கியுள்ளார்.முதல் படித்த போதே மனதில் ஆழமாகப் பதிந்த பாடல்.

******இன்று சிவராத்திரி தினம்; ஈழத்தில் புகழ் பெற்ற திருக்கேதீஸ்வரம்; திருக்கோணெஸ்வரம்; நகுலேஸ்வரம்; முனீஸ்வரம்,காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் போன்ற சிவன் கோவில்களுடன் ஏனைய சிவன் கோவில்களிலும் போர்ச்சூழலிலும் ; மிகச் சிறப்பாக வழிபாடு நடைபெறும்.எம்பெருமான் இன்னருள் பரவட்டும்.

குறிப்பு: கோணேசர் கோவில், இராவணன் வெட்டுப்படம் இணையத்திலும்; வெள்ளெருக்கம் பூப் படம் குமரனில் "கூடல்" தளத்தில் இருந்தும் எடுக்கப்பட்டன.நன்றி

சிலைகள் திருட்டு...கண்காட்சி ரத்து..


பாரிசில் உள்ள ஆசிய அரும் பொருட் காட்சியகமான கீமேயில்

(Musee Guimet).. எதிர்வரும்

ஜனவரி முதல் மார்ச் 2008 வரை ,நடைபெற இருந்த 'வங்காள

தேச நாட்டின்- அரும் பொருட்காட்சிக்கான 165 அரும் பொருட்களில், 2 விலையுயர்ந்த 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள் திருடப்பட்டன ,
அதனால் அந்தக் கண்காட்சியைக் ரத்துச் செய்து மிகுதிப் பொருட்களை திருப்பி அனுப்பும் படி வங்காள அரசு கேட்டுக் கொண்டதால் அக் கண்காட்சி ரத்துச் செய்யப்பட்டது.

இச் சிலைகள் பகுதி பகுதியாக டாக்கா விமான நிலையத்தினூடு பாரீஸ் வந்தடைந்தது.

இச் சிலைகள் ஏற்றும் வரை டாக்கா விமானநிலைய பொதி அறையில் இருந்துள்ளது.

அங்கிருந்து பாரிஸ் விமானநிலையம் வருமுன் இவ்விரு சிலைகளும்

காணாமல் போய் விட்டதாக, கீமே இயக்குநர் கூறினார்.

இவை சுடுமண்ணால் ஆன சுமார் ஒவ்வொன்றும் 6 மில்லியன்

பெறுமதி மிக்கவை எனக் கூறப்படுகிறது.

ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இது வங்காள தேச அதிகாரிகளின்ஆதரவுன்றி வெளியேற முடியாது. அத்துடன் பாரிஸ் பக்க அதிகாரிகளுக்கும்
தொடர்வு இல்லாமல் இருக்க முடியாது.

பாரிஸ் பக்கம் அவற்றின் பெறுமதி தெரிந்தோர், வங்காள தேசப்பக்கம்

தமது நாட்டின் என்ன??போனாலும் நம் கையில் நாலு காசு வரும்

என நினைப்போர் , இந்தக் கூட்டுக் களவு தான் இச் சிலையின்

மறைவுக்குக் காரணம்.



எந்த நிலையிலும் கலையார்வம் மிக்கோருக்கு இந்தக் காட்சி ரத்து ஏமாற்றமே!!
இங்கே காட்சிக்கு வரவிருந்த அரும் பொருட்கள் சிலவற்றின் படங்களிக் காண...

இங்கே அழுத்தவும்

எனக் கொரு சந்தேகம்... வங்காள தேசம் இஸ்லாம் தேசமென்கிறார்களே!!

இங்கு காட்சிக்கு வரவிருந்த அரும் பொருட்கள்...யாவும் புத்தமத,

இந்து மதச் சிலைகள் அதுவும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இந்த இஸ்லாமிய தேசத்தில் ஏன்??அரும் பொருள்...இஸ்லாம் மார்க்கம்

பற்றியதாக இல்லை.

படங்கள்***Musee Guimet முகப்புத் தோற்றம், உள்த் தோற்றம்.

காளான் விலை 150,000 யூரோ- மயக்கம் போட வேண்டாம்


கடந்த 50 வருடங்களில் முதற் தடவையாக இந்த 1.5 கிலோ எடையுடைய வெள்ளை

Truffe வகைக் காளானை இத்தாலியில் எடுத்துள்ளார்கள்.

இதன் விலை ஏலத்தில் ஒன்றரை இலட்சம் ஈரோக்கள் விலை போனதாக தொலைக் காட்சியில் கூறினார்கள்.


காளான் வகையில் நிலத்துக்கடியில் கிடைக்கும் இவ்வகைக் காளான்கள், விலை மிக அதிகமானவை. இவற்றில் கறுப்பும் , 2 ம் படத்தில் உள்ளதுபோலும் உண்டு. இவை விலை குறைந்தவை. கிலோ 3 ஆயிரம் ஈரோவரை விற்பார்கள்.




இவை பிரன்சில் chenes, ஆங்கிலத்தில் oak எனவும் தமிழில் சிந்தூரம் என கூறப்படும்


மரத்தின் வேரிலிருந்து உருவாகிறது.


இதை நன்கு பயிற்றப்பட்ட நாய்,பன்றி அத்துடன் சில வகை இலையானின் நடமாட்டத்தையும் வைத்து, நிலத்துள் இருப்பதைக் கண்டுபிடித் தெடுப்பார்கள்.


ஐரோப்பிய சமையலில் இதன் பங்கு உண்டு. பணம் படைத்தோரின் உணவு..விலையைப்பார்த்துப் புரிந்திருப்பீர்கள். குளிர்காலத்தில் இதைத் தேடுவது அதிகம். வாராந்த காளான் சந்தையில் இவை விலை பேசப்படும்


இந்த வகைக் காளான் எடுக்கும் விதத்தை அந்த தொலைக்காட்சிச் செய்தியுடன் பார்க்க

http://videos.tf1.fr/video/news/insolite/0,,3636356,00-truffe-blanche-decouverte-italie-.html">இங்கே/a>>

சூரன் போர்....


உலகெங்கும் முருகனாலயாங்களில் கந்த சஸ்டி நோன்பிருந்து, இன்று சூரன்
போரும் நடைபெற்றுள்ளது.
எங்கள் இளமைக் காலத்தில் இந்தச் சூரன் போர் ஈழத்து முருகன் கோவிலெங்கும்
மிக அமர்க்களமாக நடக்கும்.
இன்று கூட ஈழத்தில் ,நடைபெறுவதாகக் கூறினார்கள். ஈழத்தில் எந்தச்
சின்ன முருகன் கோவிலிலும் சூரன் உருவம் இருக்கும்...
அந்தப் பக்தி மயமான நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.

எங்கள் முருகன் கோவிலிலும் கந்தபுராணப் படிப்புடன்,சூரன் போர்
திருக்கல்யாணம் எனச் சிறப்பாக இந்தக் கந்த சஸ்டி நிறைவுறும்.

சூரன் போர் அன்று மாலை கோவிலடி களை கட்டி விடும். சூரன் பகுதி

முருகன் பகுதி கூடாரம் இருக்கும்.சூரன் கூடாரத்தில் பறை அடிக்க ஏற்பாடு
செய்வார்கள். சூரன் புறப்பாடு பறை முழக்கத்துடன்
ஆரம்பமாகும்.

சிறுவர், கூட்டம் கும்மாளமடித்துக் கொண்டு திரிவோம்.

எங்கள் சூரன் சுமார் 7 அடி உயரம், பிதுங்கும் விழி, கையில்
அம்பு வில்’ நீல நிறத்தில் ,அச்சுறுத்தும் பார்வையுடன் இருப்பார்.

அவர் நெங்சு பிளக்கும் அமைப்பு பலரால் போற்றப்பட்டதுடன்
சுமார் 75 வருடங்களுக்கு முன் அதைச் சிறப்புற அமைத்தது
பலரை வியப்புக்குள்ளாக்கியது.

குறிப்பாக இந்தச் சூரன் சிங்கத்தலை,யானைத்தலை,எருமைத்தலை
என பல தலைமாற்றங்கள் செய்யக்கூடியது.


வீதிக்கு ஒரு தலையாக முருகன் வீழ்த்துவார்.

கடைசியாக மாமரக்கிளையுடனும் வருவார். அந்தக் கிளையில் தொங்கும்
மாங்காய்க்கு சிறுவர்கள் அலைவோம்.

அத்துடன் அந்த மாங்காய்க்கு, திருமணமான பெண்களிடமும், பலகாலம்
குழந்தைப் பாக்கியமில்லாப் பெண்களிடமும் கிராக்கி அதிகம்.
சிலர் தமக்குக் கிடைப்பதிலும் ஒரு துண்டாவது, இப்பெண்களுக்குக்
கொடுப்பார்கள்.

அந்த மாங்காய் உண்டால், குழந்தைப் பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை.
அது நடந்ததாகக் கூடப் பலர் கூறக் கேட்டுள்ளேன்.


பின் வந்த பட்டன வாழ்வில் இந்த விழாவின் வண்ணங்கள்
குறைந்து, போருடன் இல்லாமலே போய்விட்டது.
எங்களூர்ச் சூரன் போல்.....






அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படைதனிலே வருமுருகா- முருகா

பாட்டுடைத் தலைவனென்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் - முருகா
அறுபடை......


வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த
வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படை வீடு - முருகா
அறுபடை....


ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல
ஓமெனும் மந்திரத்தின் பொருளுரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்தமலை
எங்கள் தமிழ்த் திருநாடுகண்ட சுவாமிமலை....
அறுபடை

தேவர் படைத் தலைமைப் பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
அறுபடை


குறுநகை தெய்வானை மலரோடு உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ணத் திருப்பரம் குன்றமெனும் படைவீடு
அறுபடை

தேவர் குறைதவிர்த்துச் சினம் தணிந்து
வள்ளி தெள்ளுதமிழ்க் குறத்தி தலை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை, எங்கள்
கன்னைத் தமிழர் திருத் தணிகை மலை..
அறுபடை

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர் சோலை
அறுபடை


இந்த நாளில்....
இந்தப்பாடலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் எழில் முருகனாக,ஜெயலலிதா- வள்ளி, கே.ஆர்.விஜயா- தெய்வயானையாகவும்
என் அபிமான சீர்காழியார்.. நக்கீரராகவும் தோன்றிய சிறப்பாகப் பாடி
நடித்துள்ளார்.
கண்ணதாசனின் வண்ணவரிகள்.. அறுபடைவீட்டின் சிறப்பைக் கூறும், மற்றுமொரு திருப்புகழ்.
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் காம்போதி,இந்தோளம்,சக்கரவாகம்,கானடா,ஹம்சானந்தி,
நாட்டைகுறிஞ்சி, காவி ராகங்களில் அற்புதமான அமைந்த
ராகமாலிகை.
புல்லாங்குழலும், மணி ஒலியும் இப்பாடலின் இசையில், பக்திமயமாக அமைந்தது .பெரும் சிறப்பு...

****இதை யூரியூப்பில் பதிவேத்திய Seventucenz க்கு நன்றி

** முதற் படம் நல்லூர் ஆறுமுக சாமி தேர்ப் பவனிப் படம், தம்பி கானா பிரபா பதிவில்

பிரதி எடுத்தது.



இந்தியாவில் எப்படி ? அழைப்பீர்கள்!!!!!

Unknown Vegetable

மலை நாடரின்...இப்படி இருந்த நான் எப்படி ஆனேன்..பதிவைப் பார்த்தபின்பு
அவர் படம் போட்டுள்ள மரக்கறியின் பெயரைத் தேடிச் சென்ற போது;
இந்தப் படம் வந்தது.

அதில் இதற்குப் பெயர் தெரியாது எனப் போட்டுள்ளது.
இதை ஈழத்தில் கருக்குப்பிசுக்கு என்போம்; கருக்குள்ளதால்; இதைப் போல்
இன்னும் ஒன்று மேற்பாகம் வழு வழு என இருக்கும் அதைப் "பாற்பிசுக்கு"
என்போம்.

இதை இந்தியாவில் எப்படி? அழைப்பீர்கள்...
இதன் தாவரவியல் பெயர்...ஆங்கிலப் பெயரைக் குறிப்பிட முடியுமா???

மகா கவி பாரதி 125 ம் ஆண்டு விழா...பாரிஸ்


பாரிசில் மகா கவி பாரதியாரின் 125 ம் ஆண்டு நிறைவு விழா ,
சென்ற 4 நவம்பர் 2007, ஞாயிறு அன்று பிரான்சுத் தமி்ழ்ச்
சங்கத்தினருடன்; பிரான்சில் இயங்கும் வேறு பல தமி்ழ் சமூக
பண்பாட்டுச் சங்கங்களின் அனுசரணையுடன்...தமி்ழகத்திலிருந்து
அறிஞர்கள்; கலைஞர்கள் வருகையுடன்; உள்ளூர் அறிஞர்கள்;
வளரும் கலைஞர்கள் நிகழ்ச்சியோடு வெகு விமரிசையாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இனிதே!! நிறைவெய்தியது.

இந்த 125 ஆவது பாரதி பிறந்த தினம் ,உலகிலேயே பாரிசில் தான் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார்கள்.

இவ்விழா இந்தியத் தூதுவர் திரு ரஞ்சன் மத்தை தலைமையில் நடைபெற்றது.

புதுவையில் இருந்து முன்னாள் கல்விஅமைச்சர் திருமதி ரேணுகா அப்பாத்துரை அழைக்கப்பட்டு;; "பாரதிகண்ட புதுமைப் பெண்" விருது
வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

உலகத் தமிழர் பேரவை திரு. இரா. சனார்த்தனம் அவர்களும் கலந்து
கொண்டார்கள்.



சென்னை வானொலிக் கலைஞர் "இளசை சுந்தரம்" அவர்கள்.."பாரதி இன்றிருந்தால்" எனும் நிகழ்ச்சி, நகைச்சுவையுடன் அமைந்து; பார்வையாளர்களைக் கவர்ந்தது.




பிரன்சுத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. தசரதன் பேசுகிறார்
சென்னை சண் தொலைக்காட்சிக் கலைஜி , ஆடலரசி திவ்யா கஸ்தூரி
அவர்கள் பாரதியார் பாடல்களுக்கு நடமாடினார். ஒரு மணி நேரம் நடந்த
இந்த நிகழ்ச்சி கண்ணுக்கு நல்விருந்து...


திருமகளாக.......



>

கலைமகளாக.......
மலைமகளாக........








வெகு நாட்களின் பின் ஒரு அருமையான பரத நாட்டியம் பார்க்கக் கிடைத்தது.
இதை ஏற்பாடு செய்த விழாக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அமைச்சர் ரேணுகா கூட வெகுவாக நடன தாரகையைப் புகழ்ந்தார்.




அத்துடன் பாரிசில் நடனம் பயிலும் ; நம்மவர் பிள்ளைகளின் பாடல்;
ஆடல் மி்கச் சிறப்பாக அமைந்தது.






பாரிசில் தமிழ் பயிலும் மலேசியப் மாணவி கதரின், பிரன்சு மாணவன் நிக்கோலா


இந்த விழாவில் என்னை மி்கக் கவர்ந்தது. பாரிஸ் பல்கலைக்
கழகத்தில், பிரன்சு மொழியையும்;மலே மொழியையும் தாய்
மொழியாகக் கொண்ட ; திரு. முடியப்ப நாதன் அவர்களிடம் ;
தமி்ழ் கற்கும் நிக்கோலா; கதரின் எனும் இரு மாணாக்கர்கள்..
பாரதி பாடலை சொல்லியது.





இறுதி நிகழ்வாக புதுவை பல்கலைக் கழக தலைக் கோல் ஆறுமுகம் அவர்கள்,பாஞ்சாலி துகிலுரி படலம் "தெருக் கூத்து" இடம் பெற்றது.



இது தனி நபர் நிகழ்வு

உணவு பரிமாறப்படுகிறது.....

மதியம் ;பாரிஸ் கம்பன் கழகத்தின் சார்பில் வந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கினார்கள்


மிக உணர்வுடன் உரை ஆற்ற முற்பட்ட வழக்கறிஞர் திரு.ரவி(சென்னை)

அன்றைய நிகழ்வுகளைக் படங்களுடன்; காணொளியாகவும் தந்துள்ளேன்.
என் மி்கச் சிறிய கருவியால்; தெளிவான படங்கள் எடுக்க முடியவில்லை.
மன்னிக்கவும்.

இவ்வளவு சிறப்பான விழாவிலும் மனதுக்கு நெருடலான விடயம்; பல உள்ளூர்ப் பேச்சாளர்களுக்கு இடம் கொடுத்து; நேரத்தை வீணடித்து; தமி்ழகத்தில் இருந்து வருகை தந்தவர்களுக்கு போதிய நேரமி்ன்றி; 5;10 என நிமி்டங்கள் கொடுத்து ஏமாற்றியது.

நான் எதிர் பார்த்த தமி்ழருவி மணியன் அவர்கள் விழாவுக்கு வரவில்லை.
மிகப் பெரிய ஏமாற்றம்.
எல்லோருக்கும் மேடையில் பேச இடம் கொடுத்தல்; எல்லோருக்கும் பொன்னாடை என்பதை இனிவரும் காலத்திலாவது தவிர்த்தல்; மி்கச் சிறப்பு.

அத்துடன் இச்சங்கங்களில் அங்கத்தவர்கள் கூட ;தலைவர்களையோ நிர்வாகத்தினரையோ..;மேடையில் பேச இடம் தரும்படி இனி வரும் காலங்களில் நிர்பந்தப்படுத்தாமலும்; கேட்டால் கூட போதிய நேரமில்லையெனில் மறுத்தும் இவ்விழாக்கள் இன்னும் குறைந்த நேரத்தில் ;மேலும் சிறப்பாக , தமி்ழகத்தில் இருந்து வரும் பேச்சையே தொழிலாக உள்ள அறிஞர்களின் சிறந்த உரைகளால் நிரம்ப உதவுவார்கள் என நம்புவோம்.

அத்துடன் நிர்வாகத்தினரும் நேரத்தைக் கணக்கில் கொண்டு, பேசுவோர் எண்ணிக்கையை அமைத்தால்.....மிக அருமையாகப் பேசிய சென்னை வழக்கறிஞர் ரவி....’நான் இன்னும் எவ்வளவு நேரம் பேச’ என்று மேடையில் இருந்தே கேட்கும் அவலம் வந்திராது. ‘பாரதியின் அறிவுரை பற்றிப் பேச வந்தவர்.’எனக்கு முன் எல்லோரும் பேசிவிட்டார்கள் எனக் கூறி....இனி நான் என்ன??? பேச என்று சொல்லி இருக்கும் நிலையும் வந்திருக்காது.

இனிவரும் காலத்திலாவது,காலத்தின் அருமையைக் கருத்தில் கொண்டு
உரைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தமிழகமிருந்து வரும் பேச்சாளர்களுக்குப் போதிய நேரம், கலை நிகழ்ச்சிகளிலும் வருகை தந்தோருக்கு முக்கியம் எனக் கொண்டால் இந்த விழாக்களால் பயன் உண்டு.

மேடையில் ஏறி அத்தனை பேருக்கும் வணக்கம் கூறி விட்டு இறங்கும் அவலம் இனி வேண்டாம்.

இதையே பலர் விரும்புகிறார்கள். உரியவர்கள் கவனிப்பார்கள் என நம்புவோம்.