திருகோணமலையும்....கோணேஸ்வரரும் ....கம்பரும்
அன்பே சிவம்
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பு நிமலர்நீ றணிதிரு மேனிவரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. -திருஞானசம்பந்தர்.
சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திரு மேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
இராவணன் பற்றிய கதையில்; திருகோணமலையில் உள்ள கோணேசர் ஆலயத்தைப் புரட்டி எடுக்க முற்பட்டதாக ஒரு கிளைக்கதையுண்டு.
சிறந்த சிவபக்தையான இராவணனின் தாயார் வயது முதிர்ந்த நிலையிலும் மலையேறும் சிரமத்தைச் சகிக்காத இராவணேசன் ;கோணமாமலையைப் புரட்டி ;அரண்மனைக்கருகே வைத்து தாயாரின் சிரமம் போக்க முற்பட்டு, வெட்டித் தோளைக் கொடுத்து அசைக்க முற்பட்ட போது; மலை ஆடியதால் உமையவளின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவனார்; பெருவிரலால் அழுத்தியபோது;அதனுள் சிக்குண்ட இராவணேசன்; இசையிலும் வல்லோன் ஆகையால் சாம கானம் பாடி மகிழ்வித்ததால் விடுபட்டான்.
இதனால் திருக்கோணேஸ்வரத்துக்கு 'தெட்சண கைலாயம்' எனும் சிறப்புப் பெயரும் உண்டு.
அந்த வெட்டப்பட்ட பகுதியென பிரதான மலையில் இருந்து பிரியும் பகுதியை; "இராவணன் வெட்டு "என அழைத்து பல்லாயிரக் கணக்கானோரால் விருப்பிப் பார்க்கச் செல்லும் இடமாகத் திகழ்கிறது।
பின்வரும் கம்பராமாயணம்பாடல், மண்டோதரி புலம்பலாக கம்பரால் எழுதப்பட்டது।
"வெள்ளெருக்கம் சடைமுடியான் வேற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி - இழைத்தவாறே
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியைக் மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்குதோ என உடல் புகுந்து தடவியதே ஒருவன் வாளி!!!"
வெள்ளெருக்கம் பூவை விரும்பி அணிகின்ற சிவனார் உறையும் திருக்கோணேசர் மலையை ,புரட்ட முற்பட்ட தெய்வீகத் தன்மை திகழும் பராக்கிரமமான இராவணனின் உடலில், எள் இருக்கக் கூட இடமில்லா வண்ணம் அம்புகள் இழைத்தது போல் துளைத்துச் சல்லடையாக்கியுள்ளனவே!!!ஏன்??? மண்டோதரியின் சிந்தனையாக கம்பர் கூறுகிறார்; தேன் ஒழுகும் மலர்களை அணியும் சீதாப்பிராட்டி மேல் கொண்ட காதல் இவன் உடலில்;இங்கிருக்கோ?எங்கிருக்கோ? என உச்சி முதல் உள்ளங்கால் வரை இராமபாணம் துளைத்துத் துளைத்து தேடியுள்ளது.அதனாலன்றோ!!
அழகான கற்பனை..."நான் ரசித்த வர்ணனைகள்" எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசனும்; இப்பாடலை வெகுவாக சிலாகித்து எழுதியுள்ளார்.மிக அழகாக
இந்தக் காட்சியை ,நாலு வரியில் கம்பர் அடக்கியுள்ளார்.முதல் படித்த போதே மனதில் ஆழமாகப் பதிந்த பாடல்.
******இன்று சிவராத்திரி தினம்; ஈழத்தில் புகழ் பெற்ற திருக்கேதீஸ்வரம்; திருக்கோணெஸ்வரம்; நகுலேஸ்வரம்; முனீஸ்வரம்,காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் போன்ற சிவன் கோவில்களுடன் ஏனைய சிவன் கோவில்களிலும் போர்ச்சூழலிலும் ; மிகச் சிறப்பாக வழிபாடு நடைபெறும்.எம்பெருமான் இன்னருள் பரவட்டும்.
குறிப்பு: கோணேசர் கோவில், இராவணன் வெட்டுப்படம் இணையத்திலும்; வெள்ளெருக்கம் பூப் படம் குமரனில் "கூடல்" தளத்தில் இருந்தும் எடுக்கப்பட்டன.நன்றி
8 மறுமொழிகள்:
நாங்கள் இங்கே கயிலையை புரட்ட முயன்றான் இராவணேஸ்வரன் என்று புராணம் படித்துக் கொண்டிருக்கிறோம் யோகன் ஐயா. அது திருகோணமலை எனும் தட்சிண கைலாயம் என்று நீங்கள் இந்த நம்பிக்கையைப் பற்றி ஏற்கனவே சொன்னது நினைவில் இருக்கிறது.
குமரா!
"இராவணன் வெட்டு" என ஏதாவது; கைலாயத்தில்(நேபாளம்) குறிப்பிடப்படுவதாக அறியவில்லை.இப்படி ஒன்று ஈழத்திலேயே குறிப்பிடுவதாக அதுவும் கோணேஸ்வரத்தில்.அத்துடன் ஞானசம்பந்தரும் //தென்னி லங்கையர் குலபதி மலைநலிந்
தெடுத்தவன் முடிதிண்டோ ள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
தலைவனார் // இப்படிக் குறிப்பிடுகிறார். அதனால் இது கோணமாமலையே எனும் முடிவுக்கு வந்தார்கள் போலும்.
யோகன் அண்ணை!
பதிவுக்கு நன்றி.
/* இதனால் திருக்கோணேஸ்வரத்துக்கு 'தெட்சண கைலாயம்' எனும் சிறப்புப் பெயரும் உண்டு. */
திருக்கோணேச்சரம் தட்சண கையாலம் எண்டு அழைக்கப்படும் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன காரணத்தால்தான் அப்பிடி வநத்து எண்டு இதுவரை அறிந்திருக்கவில்லை. வேறு சில சைவ சமயப் பெரியவர்கள் இப் பெயர் வந்ததுக்கு வேறு காரணம் சொல்லியிருப்பதைக் கேட்டிருக்கிறேன்.
அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் மாநிலத்தில் அமெரிக்க(ஈழத்) சைவத் தமிழரால் கட்டப்பட்ட் இராஜேசுவரி அம்மன் ஆலயம் தல வரலாறுகள் எண்ட தலைப்பிலை திருக்கோணேசுவர வரலாற்றை ஓலித்தட்டில்[cd] வெளியிட்டிருந்தார்கள்.
வெற்றி!
நலமா?? நெடுநாளின் பின்
தெட்சண கைலாசம்...நான் இப்படியே கேட்டேன். இதற்கு வேறுகாரணம் என்ன?? என அறிய ஆவல்.
குமரனும் அறிந்துள்ளார்.
மற்றும் எமது சமய விடயங்கள் சிலசமயம் இப்படி பலவாறு உள்ளதைக் அறியலாம்.
சிவராத்திரிக்கு 2 கதையுண்டு. மகாபாரதத்தில் கர்ணன் கதையில் சில மாறுபாடுகள்.
இப்போ வருடப்பிறப்பு , 2 பஞ்சாங்கம் இப்படிப் பல.
தங்களிடம் உள்ள ஒலிவட்டை ஆக்கி,மின்னஞ்சல் செய்யமுடியுமா???
அருமையான சம்பந்தர் பதிகமும், கம்பனின் கவியும் கொடுத்தமைக்கு நன்றி யோகன் அண்ணா!
திரிகோணமலை தட்சிண கைலாயம் என்று சொல்வதும் ஒரு வகையில் பொருத்தம் தான். தட்சிண காசி என்று தென்காசியைச் சொல்லும் வழக்கம் உண்டு!
ஆனால் தமிழ்நாட்டில் எந்த ஊரையும் தட்சிண கைலாயம் என்று எந்தத் தலபுராணமும் சொல்லாததே, திருகோணமலை தான் தட்சிண கைலாயம் என்பதற்கு மேலும் ஒரு சான்று!
பதிவுக்கு நன்றி அண்ணா, சிவவழிபாடு நிலவிய இடங்களில் ஒன்றான அங்கோர் வாட் - கம்போடியாவில் நிற்கின்றேன். இது குறித்து வந்ததும் விரிவாகச் சொல்கின்றேன்.
//ஆனால் தமிழ்நாட்டில் எந்த ஊரையும் தட்சிண கைலாயம் என்று எந்தத் தலபுராணமும் சொல்லாததே, திருகோணமலை தான் தட்சிண கைலாயம் என்பதற்கு மேலும் ஒரு சான்று!//
ரவி சங்கர்!
ஏனையோர் எப்படிக் கூறுகிறார்கள் எனப் பார்ப்போம். பிரபா ,விடுமுறையால் வந்து அவர் அறிந்ததைக் கூறுவதாகக் கூறியுள்ளார்.
பிரபா!
கம்போடியா நிறையப் பார்க்க இருக்குமே!
வந்து தகவல் தாருங்கள்.
உங்கள் கருத்துக்கு