சிலைகள் திருட்டு...கண்காட்சி ரத்து..


பாரிசில் உள்ள ஆசிய அரும் பொருட் காட்சியகமான கீமேயில்

(Musee Guimet).. எதிர்வரும்

ஜனவரி முதல் மார்ச் 2008 வரை ,நடைபெற இருந்த 'வங்காள

தேச நாட்டின்- அரும் பொருட்காட்சிக்கான 165 அரும் பொருட்களில், 2 விலையுயர்ந்த 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள் திருடப்பட்டன ,
அதனால் அந்தக் கண்காட்சியைக் ரத்துச் செய்து மிகுதிப் பொருட்களை திருப்பி அனுப்பும் படி வங்காள அரசு கேட்டுக் கொண்டதால் அக் கண்காட்சி ரத்துச் செய்யப்பட்டது.

இச் சிலைகள் பகுதி பகுதியாக டாக்கா விமான நிலையத்தினூடு பாரீஸ் வந்தடைந்தது.

இச் சிலைகள் ஏற்றும் வரை டாக்கா விமானநிலைய பொதி அறையில் இருந்துள்ளது.

அங்கிருந்து பாரிஸ் விமானநிலையம் வருமுன் இவ்விரு சிலைகளும்

காணாமல் போய் விட்டதாக, கீமே இயக்குநர் கூறினார்.

இவை சுடுமண்ணால் ஆன சுமார் ஒவ்வொன்றும் 6 மில்லியன்

பெறுமதி மிக்கவை எனக் கூறப்படுகிறது.

ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இது வங்காள தேச அதிகாரிகளின்ஆதரவுன்றி வெளியேற முடியாது. அத்துடன் பாரிஸ் பக்க அதிகாரிகளுக்கும்
தொடர்வு இல்லாமல் இருக்க முடியாது.

பாரிஸ் பக்கம் அவற்றின் பெறுமதி தெரிந்தோர், வங்காள தேசப்பக்கம்

தமது நாட்டின் என்ன??போனாலும் நம் கையில் நாலு காசு வரும்

என நினைப்போர் , இந்தக் கூட்டுக் களவு தான் இச் சிலையின்

மறைவுக்குக் காரணம்.எந்த நிலையிலும் கலையார்வம் மிக்கோருக்கு இந்தக் காட்சி ரத்து ஏமாற்றமே!!
இங்கே காட்சிக்கு வரவிருந்த அரும் பொருட்கள் சிலவற்றின் படங்களிக் காண...

இங்கே அழுத்தவும்

எனக் கொரு சந்தேகம்... வங்காள தேசம் இஸ்லாம் தேசமென்கிறார்களே!!

இங்கு காட்சிக்கு வரவிருந்த அரும் பொருட்கள்...யாவும் புத்தமத,

இந்து மதச் சிலைகள் அதுவும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இந்த இஸ்லாமிய தேசத்தில் ஏன்??அரும் பொருள்...இஸ்லாம் மார்க்கம்

பற்றியதாக இல்லை.

படங்கள்***Musee Guimet முகப்புத் தோற்றம், உள்த் தோற்றம்.

காளான் விலை 150,000 யூரோ- மயக்கம் போட வேண்டாம்


கடந்த 50 வருடங்களில் முதற் தடவையாக இந்த 1.5 கிலோ எடையுடைய வெள்ளை

Truffe வகைக் காளானை இத்தாலியில் எடுத்துள்ளார்கள்.

இதன் விலை ஏலத்தில் ஒன்றரை இலட்சம் ஈரோக்கள் விலை போனதாக தொலைக் காட்சியில் கூறினார்கள்.


காளான் வகையில் நிலத்துக்கடியில் கிடைக்கும் இவ்வகைக் காளான்கள், விலை மிக அதிகமானவை. இவற்றில் கறுப்பும் , 2 ம் படத்தில் உள்ளதுபோலும் உண்டு. இவை விலை குறைந்தவை. கிலோ 3 ஆயிரம் ஈரோவரை விற்பார்கள்.
இவை பிரன்சில் chenes, ஆங்கிலத்தில் oak எனவும் தமிழில் சிந்தூரம் என கூறப்படும்


மரத்தின் வேரிலிருந்து உருவாகிறது.


இதை நன்கு பயிற்றப்பட்ட நாய்,பன்றி அத்துடன் சில வகை இலையானின் நடமாட்டத்தையும் வைத்து, நிலத்துள் இருப்பதைக் கண்டுபிடித் தெடுப்பார்கள்.


ஐரோப்பிய சமையலில் இதன் பங்கு உண்டு. பணம் படைத்தோரின் உணவு..விலையைப்பார்த்துப் புரிந்திருப்பீர்கள். குளிர்காலத்தில் இதைத் தேடுவது அதிகம். வாராந்த காளான் சந்தையில் இவை விலை பேசப்படும்


இந்த வகைக் காளான் எடுக்கும் விதத்தை அந்த தொலைக்காட்சிச் செய்தியுடன் பார்க்க

http://videos.tf1.fr/video/news/insolite/0,,3636356,00-truffe-blanche-decouverte-italie-.html">இங்கே/a>>

சூரன் போர்....


உலகெங்கும் முருகனாலயாங்களில் கந்த சஸ்டி நோன்பிருந்து, இன்று சூரன்
போரும் நடைபெற்றுள்ளது.
எங்கள் இளமைக் காலத்தில் இந்தச் சூரன் போர் ஈழத்து முருகன் கோவிலெங்கும்
மிக அமர்க்களமாக நடக்கும்.
இன்று கூட ஈழத்தில் ,நடைபெறுவதாகக் கூறினார்கள். ஈழத்தில் எந்தச்
சின்ன முருகன் கோவிலிலும் சூரன் உருவம் இருக்கும்...
அந்தப் பக்தி மயமான நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.

எங்கள் முருகன் கோவிலிலும் கந்தபுராணப் படிப்புடன்,சூரன் போர்
திருக்கல்யாணம் எனச் சிறப்பாக இந்தக் கந்த சஸ்டி நிறைவுறும்.

சூரன் போர் அன்று மாலை கோவிலடி களை கட்டி விடும். சூரன் பகுதி

முருகன் பகுதி கூடாரம் இருக்கும்.சூரன் கூடாரத்தில் பறை அடிக்க ஏற்பாடு
செய்வார்கள். சூரன் புறப்பாடு பறை முழக்கத்துடன்
ஆரம்பமாகும்.

சிறுவர், கூட்டம் கும்மாளமடித்துக் கொண்டு திரிவோம்.

எங்கள் சூரன் சுமார் 7 அடி உயரம், பிதுங்கும் விழி, கையில்
அம்பு வில்’ நீல நிறத்தில் ,அச்சுறுத்தும் பார்வையுடன் இருப்பார்.

அவர் நெங்சு பிளக்கும் அமைப்பு பலரால் போற்றப்பட்டதுடன்
சுமார் 75 வருடங்களுக்கு முன் அதைச் சிறப்புற அமைத்தது
பலரை வியப்புக்குள்ளாக்கியது.

குறிப்பாக இந்தச் சூரன் சிங்கத்தலை,யானைத்தலை,எருமைத்தலை
என பல தலைமாற்றங்கள் செய்யக்கூடியது.


வீதிக்கு ஒரு தலையாக முருகன் வீழ்த்துவார்.

கடைசியாக மாமரக்கிளையுடனும் வருவார். அந்தக் கிளையில் தொங்கும்
மாங்காய்க்கு சிறுவர்கள் அலைவோம்.

அத்துடன் அந்த மாங்காய்க்கு, திருமணமான பெண்களிடமும், பலகாலம்
குழந்தைப் பாக்கியமில்லாப் பெண்களிடமும் கிராக்கி அதிகம்.
சிலர் தமக்குக் கிடைப்பதிலும் ஒரு துண்டாவது, இப்பெண்களுக்குக்
கொடுப்பார்கள்.

அந்த மாங்காய் உண்டால், குழந்தைப் பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை.
அது நடந்ததாகக் கூடப் பலர் கூறக் கேட்டுள்ளேன்.


பின் வந்த பட்டன வாழ்வில் இந்த விழாவின் வண்ணங்கள்
குறைந்து, போருடன் இல்லாமலே போய்விட்டது.
எங்களூர்ச் சூரன் போல்.....


அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படைதனிலே வருமுருகா- முருகா

பாட்டுடைத் தலைவனென்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் - முருகா
அறுபடை......


வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த
வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படை வீடு - முருகா
அறுபடை....


ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல
ஓமெனும் மந்திரத்தின் பொருளுரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்தமலை
எங்கள் தமிழ்த் திருநாடுகண்ட சுவாமிமலை....
அறுபடை

தேவர் படைத் தலைமைப் பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
அறுபடை


குறுநகை தெய்வானை மலரோடு உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ணத் திருப்பரம் குன்றமெனும் படைவீடு
அறுபடை

தேவர் குறைதவிர்த்துச் சினம் தணிந்து
வள்ளி தெள்ளுதமிழ்க் குறத்தி தலை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை, எங்கள்
கன்னைத் தமிழர் திருத் தணிகை மலை..
அறுபடை

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர் சோலை
அறுபடை


இந்த நாளில்....
இந்தப்பாடலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் எழில் முருகனாக,ஜெயலலிதா- வள்ளி, கே.ஆர்.விஜயா- தெய்வயானையாகவும்
என் அபிமான சீர்காழியார்.. நக்கீரராகவும் தோன்றிய சிறப்பாகப் பாடி
நடித்துள்ளார்.
கண்ணதாசனின் வண்ணவரிகள்.. அறுபடைவீட்டின் சிறப்பைக் கூறும், மற்றுமொரு திருப்புகழ்.
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் காம்போதி,இந்தோளம்,சக்கரவாகம்,கானடா,ஹம்சானந்தி,
நாட்டைகுறிஞ்சி, காவி ராகங்களில் அற்புதமான அமைந்த
ராகமாலிகை.
புல்லாங்குழலும், மணி ஒலியும் இப்பாடலின் இசையில், பக்திமயமாக அமைந்தது .பெரும் சிறப்பு...

****இதை யூரியூப்பில் பதிவேத்திய Seventucenz க்கு நன்றி

** முதற் படம் நல்லூர் ஆறுமுக சாமி தேர்ப் பவனிப் படம், தம்பி கானா பிரபா பதிவில்

பிரதி எடுத்தது.இந்தியாவில் எப்படி ? அழைப்பீர்கள்!!!!!

Unknown Vegetable

மலை நாடரின்...இப்படி இருந்த நான் எப்படி ஆனேன்..பதிவைப் பார்த்தபின்பு
அவர் படம் போட்டுள்ள மரக்கறியின் பெயரைத் தேடிச் சென்ற போது;
இந்தப் படம் வந்தது.

அதில் இதற்குப் பெயர் தெரியாது எனப் போட்டுள்ளது.
இதை ஈழத்தில் கருக்குப்பிசுக்கு என்போம்; கருக்குள்ளதால்; இதைப் போல்
இன்னும் ஒன்று மேற்பாகம் வழு வழு என இருக்கும் அதைப் "பாற்பிசுக்கு"
என்போம்.

இதை இந்தியாவில் எப்படி? அழைப்பீர்கள்...
இதன் தாவரவியல் பெயர்...ஆங்கிலப் பெயரைக் குறிப்பிட முடியுமா???

மகா கவி பாரதி 125 ம் ஆண்டு விழா...பாரிஸ்


பாரிசில் மகா கவி பாரதியாரின் 125 ம் ஆண்டு நிறைவு விழா ,
சென்ற 4 நவம்பர் 2007, ஞாயிறு அன்று பிரான்சுத் தமி்ழ்ச்
சங்கத்தினருடன்; பிரான்சில் இயங்கும் வேறு பல தமி்ழ் சமூக
பண்பாட்டுச் சங்கங்களின் அனுசரணையுடன்...தமி்ழகத்திலிருந்து
அறிஞர்கள்; கலைஞர்கள் வருகையுடன்; உள்ளூர் அறிஞர்கள்;
வளரும் கலைஞர்கள் நிகழ்ச்சியோடு வெகு விமரிசையாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இனிதே!! நிறைவெய்தியது.

இந்த 125 ஆவது பாரதி பிறந்த தினம் ,உலகிலேயே பாரிசில் தான் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார்கள்.

இவ்விழா இந்தியத் தூதுவர் திரு ரஞ்சன் மத்தை தலைமையில் நடைபெற்றது.

புதுவையில் இருந்து முன்னாள் கல்விஅமைச்சர் திருமதி ரேணுகா அப்பாத்துரை அழைக்கப்பட்டு;; "பாரதிகண்ட புதுமைப் பெண்" விருது
வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

உலகத் தமிழர் பேரவை திரு. இரா. சனார்த்தனம் அவர்களும் கலந்து
கொண்டார்கள்.சென்னை வானொலிக் கலைஞர் "இளசை சுந்தரம்" அவர்கள்.."பாரதி இன்றிருந்தால்" எனும் நிகழ்ச்சி, நகைச்சுவையுடன் அமைந்து; பார்வையாளர்களைக் கவர்ந்தது.
பிரன்சுத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. தசரதன் பேசுகிறார்
சென்னை சண் தொலைக்காட்சிக் கலைஜி , ஆடலரசி திவ்யா கஸ்தூரி
அவர்கள் பாரதியார் பாடல்களுக்கு நடமாடினார். ஒரு மணி நேரம் நடந்த
இந்த நிகழ்ச்சி கண்ணுக்கு நல்விருந்து...


திருமகளாக.......>

கலைமகளாக.......
மலைமகளாக........
வெகு நாட்களின் பின் ஒரு அருமையான பரத நாட்டியம் பார்க்கக் கிடைத்தது.
இதை ஏற்பாடு செய்த விழாக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அமைச்சர் ரேணுகா கூட வெகுவாக நடன தாரகையைப் புகழ்ந்தார்.
அத்துடன் பாரிசில் நடனம் பயிலும் ; நம்மவர் பிள்ளைகளின் பாடல்;
ஆடல் மி்கச் சிறப்பாக அமைந்தது.


பாரிசில் தமிழ் பயிலும் மலேசியப் மாணவி கதரின், பிரன்சு மாணவன் நிக்கோலா


இந்த விழாவில் என்னை மி்கக் கவர்ந்தது. பாரிஸ் பல்கலைக்
கழகத்தில், பிரன்சு மொழியையும்;மலே மொழியையும் தாய்
மொழியாகக் கொண்ட ; திரு. முடியப்ப நாதன் அவர்களிடம் ;
தமி்ழ் கற்கும் நிக்கோலா; கதரின் எனும் இரு மாணாக்கர்கள்..
பாரதி பாடலை சொல்லியது.

இறுதி நிகழ்வாக புதுவை பல்கலைக் கழக தலைக் கோல் ஆறுமுகம் அவர்கள்,பாஞ்சாலி துகிலுரி படலம் "தெருக் கூத்து" இடம் பெற்றது.இது தனி நபர் நிகழ்வு

உணவு பரிமாறப்படுகிறது.....

மதியம் ;பாரிஸ் கம்பன் கழகத்தின் சார்பில் வந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கினார்கள்


மிக உணர்வுடன் உரை ஆற்ற முற்பட்ட வழக்கறிஞர் திரு.ரவி(சென்னை)

அன்றைய நிகழ்வுகளைக் படங்களுடன்; காணொளியாகவும் தந்துள்ளேன்.
என் மி்கச் சிறிய கருவியால்; தெளிவான படங்கள் எடுக்க முடியவில்லை.
மன்னிக்கவும்.

இவ்வளவு சிறப்பான விழாவிலும் மனதுக்கு நெருடலான விடயம்; பல உள்ளூர்ப் பேச்சாளர்களுக்கு இடம் கொடுத்து; நேரத்தை வீணடித்து; தமி்ழகத்தில் இருந்து வருகை தந்தவர்களுக்கு போதிய நேரமி்ன்றி; 5;10 என நிமி்டங்கள் கொடுத்து ஏமாற்றியது.

நான் எதிர் பார்த்த தமி்ழருவி மணியன் அவர்கள் விழாவுக்கு வரவில்லை.
மிகப் பெரிய ஏமாற்றம்.
எல்லோருக்கும் மேடையில் பேச இடம் கொடுத்தல்; எல்லோருக்கும் பொன்னாடை என்பதை இனிவரும் காலத்திலாவது தவிர்த்தல்; மி்கச் சிறப்பு.

அத்துடன் இச்சங்கங்களில் அங்கத்தவர்கள் கூட ;தலைவர்களையோ நிர்வாகத்தினரையோ..;மேடையில் பேச இடம் தரும்படி இனி வரும் காலங்களில் நிர்பந்தப்படுத்தாமலும்; கேட்டால் கூட போதிய நேரமில்லையெனில் மறுத்தும் இவ்விழாக்கள் இன்னும் குறைந்த நேரத்தில் ;மேலும் சிறப்பாக , தமி்ழகத்தில் இருந்து வரும் பேச்சையே தொழிலாக உள்ள அறிஞர்களின் சிறந்த உரைகளால் நிரம்ப உதவுவார்கள் என நம்புவோம்.

அத்துடன் நிர்வாகத்தினரும் நேரத்தைக் கணக்கில் கொண்டு, பேசுவோர் எண்ணிக்கையை அமைத்தால்.....மிக அருமையாகப் பேசிய சென்னை வழக்கறிஞர் ரவி....’நான் இன்னும் எவ்வளவு நேரம் பேச’ என்று மேடையில் இருந்தே கேட்கும் அவலம் வந்திராது. ‘பாரதியின் அறிவுரை பற்றிப் பேச வந்தவர்.’எனக்கு முன் எல்லோரும் பேசிவிட்டார்கள் எனக் கூறி....இனி நான் என்ன??? பேச என்று சொல்லி இருக்கும் நிலையும் வந்திருக்காது.

இனிவரும் காலத்திலாவது,காலத்தின் அருமையைக் கருத்தில் கொண்டு
உரைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தமிழகமிருந்து வரும் பேச்சாளர்களுக்குப் போதிய நேரம், கலை நிகழ்ச்சிகளிலும் வருகை தந்தோருக்கு முக்கியம் எனக் கொண்டால் இந்த விழாக்களால் பயன் உண்டு.

மேடையில் ஏறி அத்தனை பேருக்கும் வணக்கம் கூறி விட்டு இறங்கும் அவலம் இனி வேண்டாம்.

இதையே பலர் விரும்புகிறார்கள். உரியவர்கள் கவனிப்பார்கள் என நம்புவோம்.

ஆச்சரியம் ஆனால் உண்மை!!

நாம் அறிந்த வகையில் இயற்கையில் சில நியதிகள் உண்டு. ஆனால் சில வேளைகளில் இந்த நியதிகள் உடைக்கப்படுவதும் உண்டு.


பல வருடங்களுக்கு முன் வந்த 'துக்ளக்' இதழில், இயற்கையின் நியதி தவறும் போது சில அசம்பாவிதங்கள் நடக்கும் எனும் வகையில் ஒரு
துணுக்குச் செய்தி போட்டு, பாம்பு தவளையை விழுங்கும் ஆனால் தவளை பாம்பை விழுங்கினால் மன்னனுக்குக் கேடு...என குறிப்பிட்டிருந்தது.


இதைப் படித்த காலக் கட்டத்தில் ,நான் ஒரு விபரணச் சித்திரம் பார்த்தேன்.
அதில் பாம்பு ,தவளையைத் துடிக்கத் துடிக்க விழுங்கியது.( அது எந்த நாட்டில் பிடிக்கப்பட்ட படம் என்பது தெரியவில்லை)

சில மாதங்களின் பின் நமது, எம். ஜீ. ஆர் அவர்கள் காலமாகிறார்.

என் எண்ணத்தில் வாசித்ததையும், இந்த மரணத்தையும் தொடர்பு படுத்திய வண்ணமே இருந்தது.


இப்போது, யூரியூப்பில்...சும்மா...தேடிப்பார்ப்போம் என நினைத்து, "Frog eats snake" எனத் தட்டிய போது இந்தக் காட்சி கண்டேன்.


பிரான்சில் , ஒரு வகை அமெரிக்க இராட்சத தவளை, இதன் சோடி ஒன்று செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு, பின் ஆற்றில் விடப்பட்டதால், அது பெருகி நீர் நிலைகளில் உள்ள மீன்களுடன், நீர்ப்பறவைகளையும் உண்ணத் தொடங்கியதால், பின் பிடித்து அழித்துக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.


இதைப் பிரான்சில் Grenouille Taureau என்பார்கள். அதாவது 'எருதுத் தவளை'. 2 கிலோ வரை வளருமாம்.இப்படத்தைப் பிடித்தவர் , சற்று அதிகமாக ஆட விட்டு விட்டார், எனினும் 1நிமிடம் 5 செக்கனின் மிகத் தெளிவாகத் தெரிகிறது. பாருங்கள்.
என்னைக் கவர்ந்த சுவரொட்டி!

ன்று பாரிசில் திரையிடப்படவுள்ள Sandra BULLOCK நடித்த "PREMONITION" திரைப்படத்தின் விளம்பரச் சுவரோட்டியைப் பார்த்ததும் மிகக் கவர்ந்தது.

இயற்கை மரக்காட்டினுள் பெண் கோட்டோவியம்...

உங்களுக்குப் பிடித்ததா??வீடியோ முயற்சி- குழந்தைகள்

புதிதாக ஒரு அடையாளம் தெரிகிறதே, என நோண்டிய போது படம் காட்டலாம் போல இருந்துது.

சரி என வீட்டுக்கு வந்த மைத்துனர் குழந்தைகளில் பழகி விட்டேன்.

சரியாக வந்துது போல தான் கிடக்கிறது.வெளிச்சம்,தெளிவு குறைவு. என் குட்டி NIKON
தன்னாலானதைச் செய்துள்ளது.

பஞ்சாமிர்தம் 2


யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கொடியேறியுள்ளது.
தம்பி ஊரோடி பகீ சுடச் சுடப் படம் போட்டிருந்தார். அதில் ஒன்று.
பகீக்கு நன்றி!

கந்தனுக்கு உகந்த பஞ்சாமிர்தப் பதிவு.சர்க்கரை ,தயிர், நெய்,பால் ,தேன் -பஞ்சாமிர்தம்பஞ்சாமிர்தம் 2

17 -11-2006 , பஞ்சாமிர்தம் என ஒரு பதிவிட்டு, இந்தப் ‘பஞ்சாமிர்தம்’

தயாரிக்க எத்தனை பழங்கள் சேர்க்கிறார்கள்.
( http://paris-johan.blogspot.com/2006/11/blog-post_9345.html)
என ஒரு கேள்வியும் கேட்டு முடித்திருந்தேன்.

சில பதிவர்கள் தங்களுக்குத் தெரிந்ததைக் கூறியிருந்தார்கள்.
அதன் பின் ஏற்பட்ட ‘பிற்றா’ சிக்கலின் பின் பதிவு போடச் சிரமம்
வந்து அதில் இருந்து விடுபட்டு ,அதன் தொடரை இன்று ,நாளையென ஒத்திப் போட்டு ,இப்போதிட உள்ளேன்.

பஞ்சாமிர்தத்தில் எத்தனை பழங்கள் சேர்கிறார்கள் என்பதற்கு வந்த விடைகள்

1-கண்ணபிரான் ரவிசங்கர்
பாம்பன் சுவாமிகள் தனது பதிகத்தில் பஞ்சாமிர்தம் பற்றிப் பாடியுள்ளார்.பழம், பால், நெய், தேன், சர்க்கரை/கல்கண்டு இவையே ஐந்து பொருட்களாகச் சொல்லி ஒவ்வொன்றிலும் அபிஷேகத்தை விவரித்துள்ளார்.பழம் பொதுவாக வாழை மட்டுமே!பின்னாளில் பல பழங்கள், பேரீச்சம் பழம் எல்லாம் சேர்ந்து கொண்டாலும், வாழை இல்லாமல் பஞ்சாமிர்தம் கிடையவே கிடையாது!
2-என்னார்
ஐந்து(பஞ்ச)பொருட்கள்1.மலைவாழைப்பழம்2.பேரீச்சம்பழம்3.கற்கண்டு
4.பச்சைகற்பூரம்5.ஏலக்காய்6.நாட்டுவெல்லம்7.பலாபழம் சேர்பதும் உண்டு.

3-வல்லி சிம்ஹன்
பஞ்ச அமிர்தம் பற்றி ரவி சொல்வது போலத்தான் இருக்கும் சாப்பிட:-)என்னார் ஐயா சொல்வதுபோல் பேரீச்சம்பழம் தட்டுப்படும்.
4-சுப்பையா அண்ணா
PANCHAMIRTHAM. Banana, 1. Grapes, a small buch. Raisins, 1 tsp. Dry dates, 3. Apple, 1. Jaggery, 1 cup. Honey, 1/4 cup. Ghee, 6 tsp ... ww.numkitchen.com/sw17_panchamirtham.htm

5-கானா பிரபா
எனக்குத் தெரிந்து, மாம்பழம், வாழைப்பழம், பேரீச்சை, பலாப்பழம், தோடை
6-சின்னக்குட்டி
/சின்னக் குட்டியர்!என்னது??? பஞ்சாமிர்தம் புறுட் சலாடா??(//ஆமாம் அது சாமிக்குக் கொடுக்கப்படும் அந்த நாள் புரூட் சலட் ;) ஹஹஹ

7- ஹரன்

பஞ்சாமிர்தம் என்பது = பஞ்ச (ஐந்து) + அமிர்த்ம் என்று சிறு வயதில் சமயப் புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.அதில் கட்டாயம் இடம் பெற வேண்டியவை முக் கனிகள் (வாழைப் பழம், பலாப் பழம், மாம் பழம்) பின்பு அதில் வேறு இருவகைப் பழமும் (ஊரில் பேரீச்ச்ம் பழம்/ மாதுளம் பழம்/ தொடை) ஆகியவற்றினைப் பஞ்சாமிர்தத்திலே கண்டிருக்கிறேன்... தேன்/கற்கண்டு போன்றனவும் சேர்க்கப்படும்...

நான் இப்பதிவிடக் காரணமாக இருந்தது. 22-01-1989 ல், இலங்கையில் இருந்து வெளிவந்த ‘சிந்தாமணி’ எனும் பத்திரிகையில் ஒரு வாசகர் ‘கேள்வி-பதில்’ பகுதிக்கு எழுதிக் கேட்ட கேள்வி, அதற்கு அந்தப் பத்திரிகையின் இப்பகுதிக்குப் பதிலிறுக்கும்’திரிஞானியார்’ எனும் புனைபெயரில் எழுதுபவர் பதில்.

அந்த வாசகர் கேள்வி:
பஞ்சாமிர்தத்தில் எத்தனை பழங்களைச் சேர்க்கிறார்கள்?

திரிஞானியார் பதில்:
இதுவும், ஒரு கேள்வியா? ‘பஞ்ச’ என்றாலே ஐந்து என்று தானே பொருள்!

என ஆச்சரியக் குறியிட்டு முடித்திருந்தது.

தன் சந்தேகமொன்றை பத்திரிகைக்கு எழுதித் தீர்க்க வேண்டுமெனும், சிந்தனையுள்ள ஒருவர், ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்பது தெரியாதவரா??
எனச் சிந்தித்துவிட்டு
, இங்கு தவறு இருக்கிறதென்பதை உணர்ந்து, பாரிசில் உள்ள நூலகம் (Centre Georges Pompidou ) சென்று ,அங்கு அன்று இருந்த ஒரே ஒரு தமிழ் உருப்படியான நா.கதிரவேற்பிள்ளை அவர்கள் யாத்த ‘தமிழ்மொழியகராதி’ யில் தேடிய போது (பிரதியின் படம் பார்க்கவும்)

அதில் இருந்த விடயம் எனக்குப் பத்திரிகை ஆசிரியருக்குப் பின் வரும்
கடிதத்தை எழுத வைத்தது.

பாரிஸ்
பிரான்ஸ்
21-01-1989


ஆசிரியர் ,சிந்தாமணி; இலங்கை
கனம்!
ஆசிரியர் அவர்கட்கு!
தங்கள் 22-01-1989 ,சிந்தாமணி ‘கேள்வி-பதில்’ பகுதியில் ,பத்தனையைச் சேர்ந்த எஸ்.ஜே.ஜெகநாதன் தனராஜ் எனும் வாசகர் கேட்ட கேள்விக்குத் ,திரிஞானியாரின் பதிலைக் கண்ணுற்றேன். அதில் திரிஞானியாரின் புலமையை விட ,மமதையே புலப்பட்டது.

வாசகர் கேள்வி:
பஞ்சாமிர்தத்தில் எத்தனை பழங்களைச் சேர்க்கிறார்கள்?
திரிஞானியார் பதில்:
இதுவும், ஒரு கேள்வியா? ‘பஞ்ச’ என்றாலே ஐந்து என்று தானே பொருள்!
என ஆச்சரியக் குறியிட்டு முடித்துள்ளார்.

இதனைப் பார்த்து ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் நான் பட்டேன். காரணம்
திரிஞானியார் பஞ்சாமிர்தம் என்றால் என்ன என்று தெரியாது, அடுத்தவரைக் கிண்டல் செய்ய முற்பட்டு ,தன் குறையைக் காட்டி விட்டார்.

வாசகர் கேள்விக்கு ,திரிஞானியார் அளித்த பதிலையிட்டு இலங்கை வாசகர்கள் யாதாயினும் விபரம் ,அடுத்தடுத்த கிழமைகளில் எழுதுவார்களா?
என எதிர்பார்த்து, எதுவும் இல்லாததால் இதை எழுதுகிறேன்.
நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் தமிழ் மொழியகராதிப்படி
பஞ்சாமிர்தம் – சர்க்கரை,தயிர்,தேன்,நெய்,பால் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(பிரதி அனுப்புகிறேன்)
எந்த வகையில் திரிஞானியார் ,வாசகர் சந்தேகத்தைத் தீர்க்கமுற்பட்டார்.
தனக்கே தெரியாத ஒரு விடயத்தை அவர் அதிமேதாவித்தனத்துடன் பதில் எழுதி தன் அகம்பாவத்தை வெளிக்காட்டி, அந்த வாசகனை இழிவுபடுத்தியுள்ளார்.
‘கற்றது கைமண்ணளவு’, யானையும் அடி சறுக்கும், சுட்டபழம் சுடாதபழம்-ஔவை, இவற்றைத் திரிஞானியார் அறியாரோ?


வாசகர் சந்தேகங்களை ஐயம் திரிபறத் தீர்க்க வேண்டியது, பத்திரிகா தர்மம் இதைவிட்டு கேலி வேறு செய்யும் பாணியில் பதில் அமைவது அழகல்ல. தங்களைச் சிறந்த பத்திரிகைகள் என்று கூறுபவற்றிற்கு அழகல்ல!

திரிஞானியார் பதிற்படி, பஞ்சாமிர்தத்தில் ‘பஞ்ச’ பழமானால், அவை எவை எனக் குறிப்பிடுவாரா?
ஒரு விடயம் நம் கோவில்களில் பஞ்சாமிர்தத்தில் முக்கனியையும் சேர்க்கிறார்கள். அதேவேளை அறுவடை காலத்துக்குத் தக்க வகையில் தோடை,மாதுளை,விளா,எலுமிச்சை என்றும் சேர்க்கும் பழக்கமும் உண்டு.
அதனால் பஞ்சாமிர்தம் ‘பஞ்ச’ எனும் கட்டுக்குள்ளும் அடங்கவில்லை.
அபிஷேகம் செய்யும் போது பழ,பால்,பஞ்சாமிர்த அபிஷேகமெனத் தனித்தனியே செய்யத் தொகையான அபிஷேக திரவியங்கள் கிடைக்காத இந்தக் காலத்தில் அர்ச்சகர்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்து பஞ்சாமிர்தம் என்று செய்கிறார்கள். இதைக் கண்டு திரிஞானியார் தவறிவிட்டார்.
வாசகர் கேள்வி இதுவும் ஒரு கேள்வியா? என்றாகவில்லை. பதிலே இது கூடத் தெரியாது ‘திரிஞானி’ ஆகிவிட்டார்களே என அதிசயம்,ஆச்சரியம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.
திரிஞானியாரின் பதிலுக்குக் கேட்கப்பட்டிருக்க வேண்டிய கேள்வி.

‘பஞ்சாமிர்தத்தில் எத்தனை அமிர்தங்களையோ,பொருட்களையோ,பண்டங்களையோ சேர்க்கிறார்கள் என்பதே!’
தயவு செய்து வாசகர்களை இனியாவது ‘மட்டம்’ தட்ட முற்பட வேண்டாம்.
அறியாமை ஒரு குறையல்ல, அறிந்தவர் போல் நடிப்பதே மிகமிகப் பெரிய குறை.
வாசகர்களின் அறிவை வளர்க்கவே பத்திரிகைகள் என நான் நினைக்கிறேன்.பத்திரிகாசிரியர்களின் வயிற்றை வளர்ப்பதற்கென நான் கருதவில்லை.
எனது பதில் கூட நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் தமிழ்மொழியகராதியின் படியே அமைந்துள்ளது.
இக்கடிதத்தைத் தங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
அன்புடன் வாசகன்
யோகன்


இந்தக் கடிதத்துக்கு, எந்த விதமான பதிலும் ,தொடர்ந்து வந்த வாரங்களில் வெளிவரவில்லை.

இந்த மௌனத்தைச் சம்மதமாகக் கொண்டேன்.

இதனால் ‘பஞ்சாமிர்தத்துக்கும் பழத்துக்கும்’ என்ன சம்பந்தமெனப் பார்த்தபோது, நமக்குக் கோவிலில் தரப்படும் அதாவது ஐரோப்பிய, அமெரிக்கக் கோவில்கள் உட்பட இப்போ அதில் அப்பிள் பழம் உட்பட பல பழங்கள் கடிபடுகின்றன.

அதாவது அபிஷேக முடிவில் அர்ச்சகர் சகலதையும் கலந்தே தருகிறார். அது பொதுப் பெயராக ‘பஞ்சாமிர்தம்’ என அழைக்கப்படுகிறது. அதனால் இப்போது பால்,தயிர்,நெய்,சர்க்கரை,தேன் கலந்து கொடுத்துப் ‘பஞ்சாமிர்தம்’என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எனினும், பஞ்சாமிர்தத்துக்குப் பழம் சேர்க்கப்படத் தேவையில்லை. எனும் முடிவுக்கு நான் வந்துள்ளேன்.

ஆனால் கோவிலில் தருவதை தாராளமாகச் சாப்பிடுவேன்.

நீங்கள் என்ன? நினைக்கிறீர்கள்.

மிதக்கும் தோட்டங்கள்!! -FLOATING GARDENSமிதக்கும் தோட்டங்கள்!! FLOATING GARDENS

பதிவர் வவ்வால் அவர்களின் "ஆழ்நீர் நெற் சாகுபடி- பொக்காலி" எனும் பதிவுக்கு;நான் இட்ட பின்னூட்டத்தில்;தொலைக்காட்சி விவரணச் சித்திரத்தில் பார்த்த மியன்மார் (பர்மா);மற்றும் சில தென் கிழக்காசிய மிக்கொங் நதியின் சதுப்பு நீர்த்தேக்கங்கள் உள்ள நாடுகளிலும் உள்ள "மிதக்கும் தோட்டங்கள்" பற்றிக் குறிப்பிட்டபோது; அவர் தனக்கு அது பற்றித் தெரியவில்லை எனவும் விளக்க முடியுமா? எனவும் கேட்டார்.

படங்களுடன் விளக்க பின்னூட்டத்தில் இயலாதென்பதால் ;யான் ஒரு பதிவாகவே அதை இடுகிறேன்.

நான் அந்த விவரணச்சித்திரத்தில் பார்த்ததையும் புரிந்து கொண்டதையும் இயன்றவரை விபரிக்கிறேன்.

இது குறிப்பாக மிக வெற்றியளித்துள்ளது மியன்மார் INLE LAKE நன்நீர் ஏரியிலேயே!!
அந்த ஏரியில் மரவீடுகள் அமைத்து வாழும் INTHAS எனும் இன மக்கள் கண்டு பிடித்த வழி முறையே இம் மிதக்கும் தோட்டம்.

அந்த ஏரியில் பெருவாரியாக வளரும் மிதக்கும் வகைப் பாசியை சேகரித்து ;ஏரிக்கரையோரம் பரப்பிக் குவிக்கிறார்கள்.

அவற்றின் கீழ்ப்பகுதி உக்கிப் போக மேற்பகுதி காயும் போது இயல்பாக அது மிதக்கும் நிலையடைகிறது.

பின் அதன் மேல் சுமார் அரை அடி உயரத்துக்கு ஏரி வண்டல் மண்ணை அள்ளிப்போட்டுத் தரையாக்கியதும் ,சுமார் 4' ஆழமுடைய தோட்டம் நிலம் தயார் நிலைக்கு வருகிறது.

பின் அதை 4' x 60 'அடிக்கு பெரிய மரம் அரியும் வாளால் அரிந்து ;
துண்டுகளாக்கி இழுத்துச் சென்று ஏரியில் சற்று ஆழமான பகுதியில்
ஊன்றப்பட்ட மூங்கில் தடிகளில் கட்டி;ஒவ்வொன்றுக்குமிடையில் சிறு படகு செல்லக்கூடிய வண்ணம் இடைவெளியும் விட்டுள்ளார்கள்.இச்சிறு படகில் சென்றே தோட்டப்பராமரிப்பு, மற்றும் சாகுபடி செய்யவேண்டும். மிக இலகுவாக ஓட்டக்கூடிய இந்த சிறு தோணிகளில் முழுக்குடும்பமுமே இதன் பராமரிப்பில் ஈடுபடுவது அழகான காட்சி.

இந்தச் சாகுபடி யாவும் மிதக்கும் சந்தையிலேயே விற்பனையோ பண்டமாற்றோ செய்யப்படுகிறது.
மொத்தமாக வாங்குபவர்களும் இந்தச் சந்தையிலே வாங்கிச் செல்கிறார்கள்.


கோவா, கோவாப்பூ, கத்தரி;வெண்டை;அவரை; பீர்க்கு;; முக்கியமாகத் தக்காளி மற்றும் பூவினங்கள் சாகுபடி செய்கிறார்கள்.


இங்கு சாகுபடியாகும் தக்காளி மியான்மார் முழுதும் விற்பனையாவதுடன் ;பிரசித்தமானதெனவும் கூறினார்கள்.

இத்தோட்டம் சுமார் 15 வருடங்கள் பாவனையின் பின் நீரில் தானே அமிழ்ந்துவிடும்.

அத்துடன் இந்த நீர் நிலையில் உள்ள மீன்களையும் வலைவீசியோ ;விசேட கூடையாலோ பிடிக்கிறார்கள்.


இந்த நீராதரத்தில் அவர்கள் தங்கள் அனைத்து வாழ்வாதாரத்தையும் அமைத்து வாழ்கிறார்கள்.

தாய்லாந்து,கம்பூச்சியா, லாவோஸ் போன்ற நாடுகளிலும் இந்த முறை பயன்பாட்டில் உள்ளது.

இப்போது வங்காள தேசத்திலும் நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இணையத்தில் படித்தேன்.

முதல் முதல் இதைத் தொலைக்காட்சியில் பார்த்த போது, ஈழத்தில் இரணைமடுக் குளத்திலும் ,கிளிநொச்சி,வவுனியாவிலும் கைக்கொள்ளக் கூடிய முறையாக இருக்கென நினைத்தேன்.

எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சரியமில்லை.

அபூர்வ படங்கள்!! கிளைப் பனையும்; கிளைத் தென்னையும்...

லங்கையில் வடபகுதியில் உள்ள தீவுக் கூட்டத்தில் நெடுந்தீவில் இப்படி கிளையுடன் உள்ள பனையின் படம் பார்த்துள்ளேன்.
ஆனால் இந்தப் பனை எங்கே ? உள்ளது,எப்போ பிடித்த படம் எனும் விபரம் தமிழ்நாதத்தில் தரப்படவில்லை.


இந்தத் செவ்விளநீர்த் தென்னை ,இலங்கையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள கற்பிட்டி எனும் கிராமத்தில்( கொழும்பிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர்)உள்ளது. இப்படம் அங்கு சென்ற என் நண்பர் ஒருவரால் எடுக்கப்பட்டது.

தமிழக நண்பர்களே!!! இந்தியாவில் இப்படி? உண்டா??

****தமிழ்நாதத்திற்கும்; நண்பருக்கும் நன்றி

அடையார்...அவன் அடையான்;


அவள் அடைச்சி;


அது அடைப் பெட்டை;


அடையார் பிக்பொக்கட் அடிச்சிருவாங்க கவனம்!! ;


அடையான் கடையில வாங்கலாம்!!


இப்படியான சொற் புழக்கத்தை.பாரிஸ் வந்து ,பாரிசில் வாழும் ஈழத்தமிழருடன் பழகியவர்கள் கேட்டிருக்காமல் இருக்க முடியாது.

வட ஆபிரிக்க நாடுகளான அல்ஜீரியா,மொறக்கோ;துனிசியா வைச் சேர்ந்தோர் பிரான்சில் அதிகம் உள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம்.


இந்நாடுகள் பிரான்சின் காலனித்துவத்தில் இருந்ததால் அவர்கள்

இங்கே பலதசாப்தங்களுக்கு முன் குடியேறி வியாபாரம் போன்ற
துறைகளில் கால் பதித்துள்ளார்கள்.


நம் நாட்டில் பெட்டிக்கடைப் பாங்கான வியாபார நிலையங்களை ;

இங்கே இவர்கள் தெருவுக்குத் தெரு வைத்திருப்பதைக் காணலாம்.

இவை பலசரக்குக் கடைகளாக இருக்கும்.இவர்களின் சிறப்பம்சம்; இக்கடையுள்ள கட்டடங்களில் மேல்மாடிகளில் வசிப்பது ;

நேரகாலமின்றிக் கடையைத் திறந்துவைத்து வியாபாரம் செய்வது.
இவர்களை ;நம் ஈழத்தவர் குறிப்பிடும் செல்லப் பெயரே!!
அடையான்..;அடையார்

இக் குறியீட்டுப் பெயர் ...இந்த மக்களுக்கு வந்ததற்கு அதுவும்

ஈழத்தவர்கள் மத்தியில் புழக்கத்துக்கு வந்ததற்கு;

ஒரு சுவையான உண்மைத் தகவல் உண்டு.

80 க்களில்..ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து அகதியாக பல நாடுகள்
சென்ற போது பாரிசும் வந்தார்கள்.


அவர்கள் பெரும்பாலும் சில அனுகூலங்கள் கருதி; ஒரு வீட்டில்
குறைந்தது 5 போராவது சேர்ந்து வாழ்ந்தார்கள்.


இவர்களில் ஈழத்தில் பலபகுதிகளிலும் இருந்து வந்தவர்களாக
இருந்தார்கள்.
பல விதமான பேச்சு வழக்கும்; சொற் புழக்கமும் உடையவராக
இருந்தார்கள்.


அப்போது பகல் வேலைக்குச் சென்று இரவு மாத்திரமே ;குறிப்பாக
நள்ளிரவே சமையல் சாப்பாடு தொடங்கும் வழக்கம் இருந்தது.

அந்த நேரங்களில் தேவையான சமையல் சாமான்கள்; இல்லாதபோது அதைவாங்க இரவு திறந்திருக்கும் கடைகளே ;இந்த வட ஆபிரிக்கர் கடைகள்தான்!

இவர்களிடம் தேவையானவற்றை வாங்க அனுப்பப்படுபவரோ!!
அந்த வீட்டில் இருப்போரில் யார்? கடைசியாக ஊரில் இருந்து
வந்தாரோ! அவரே (எடுபிடி)

அப்போ அந்தப் புதியவர்..ஈழத்தில் வேளைக்கே கடைகள் பூட்டிவதை
மனதில் கொண்டு;"இந்த நேரம் கடை பூட்டியிருக்குமே!! எனக்
கூறினால்..

மற்றவர் " அவன் அடையான்" என அதாவது அவன் பூட்டியிருக்கமாட்டான் என்பதைக் கூற புதிதாக வந்தவர் .

இந்த "அடையான் என்பது ஓர் இனம் எனக் கருதி அதாவது

அல்ஜீரியன் ; துருக்கியன் ; அமெரிக்கன் , ருசியன் என்பதுபோல்

அப்படியே மெள்ள ;மெள்ள இந்தச் சொல் புழக்கத்தில்

வந்ததாகக் கூறுவர்.

ஈழத்தில் பெரும்பாலும் கடை பூட்டுதல் என்பதே!!புழக்கத்தில்
உள்ள சொல்; ஆனால்
மூடுதல்;அடைத்தல்;சாத்துதல் போன்ற சொற்களும்
வெகு;வெகு சொற்பமாகப் புழக்கத்தில் உண்டு.

அகராதியில் கூட மாற்றலாம்; அந்த அளவு பிரான்சில் குறிப்பாக
ஈழத்தமிழர் மத்தியில் இது புழக்கத்தில் உண்டு.

இந்தச் சொற் புழக்கத்தையும்; விபரத்தையும் நீங்கள்

அறிந்துள்ளீர்களா??


உங்கள் பாரிசில் வாழும் உறவினர் நண்பர்கள் கூறக் கேட்டுள்ளீர்கள்ளா??


**படம் ; இங்குள்ள ஓர் "அடையான் கடை" யின் படம்.